லூக்கா 8 : 50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zAyDCZO6t4w
பயம் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ சில சூழ்நிலையில் வருகின்றது. பயத்திற்க்கு ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், சின்னவன், பெரியவன் என்கின்ற வித்தியாசமே இல்லை. சிலர் இந்த பயத்திலிருந்து வெளியே வரமுடியாமல், தவறான முடிவுகளை எடுத்து, அதுதான் தீர்வு என்று எண்ணுகின்றார்கள். ஒருவேளை இன்று நீங்களும் ஏதாகிலும் காரியங்களை குறித்தோ அல்லது யாரையாகிலும் குறித்தோ பயந்துகொண்டிருப்பீர்கள் என்றால், நம்முடைய தேவன் உங்களை பார்த்து பயப்படாதிருங்கள் என்று சொல்லுகின்றார். அவர் உங்களுடைய எல்லா பயங்களையும் நீக்கி உங்களை விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார்.
நீங்கள் எதிர்பார்த்து ஜெபித்துக்கொண்டிருக்கின்ற காரியங்களில் பதில் கிடைக்க தாமதம் ஆகும்போது பயம் உங்களை மேற்கொள்ளலாம். இதற்கு காரணம் நாட்கள் செல்லசெல்ல விசுவாசத்தின் அளவு குறைகின்றது. விசுவாசம் குறையும்போது பயம் மேற்கொள்ளும்.
ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்: தன் வீட்டிற்கு வந்து தன்னுடைய மகளை சுகமாக்கும்படியாய் அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு, நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று, அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி, என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி, திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து, மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து, உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி இயேசுவை அழைக்க வேண்டாம் என்றார்கள். இந்த
வார்த்தையை கேட்டவுடனே யவீரு பயந்து, எல்லாம் முடிந்தது இனி என் மகள் பிழைக்கமாட்டாள் என்று எண்ணினார். தேவனோடுதான் இருக்கின்றேன், பின்பு ஏன் எங்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற கேள்விகள்கூட யவீருக்கு வந்திருக்கலாம்.
அப்பொழுது இயேசு யவீரை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி, யவீருவின் வீட்டிற்க்கு சென்று மரித்துப்போன அந்த மகளின் கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள், அவர்கள் எல்லோரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
நீங்களும் உங்கள் சூழ்நிலைகளைக் குறித்துப் பயப்படாமல், விசுவாசம் உள்ளவர்களாய் தொடர்ந்து ஜெபியுங்கள். நிச்சயமாய் தேவன் உங்கள் ஜெபங்களை கேட்டு: மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமிக்கும்படியான அதிசயங்களை உங்களுக்கும் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org