ஒரு வார்த்தையில் பிசாசை துரத்துங்கள் (Cast out the devil in one word)

மத் 8:31,32 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/o_I6YU4xGjI

சாத்தான் பலவான்; அவன் பொய்களுக்கெல்லாம் அதிபதி; அவன் அநேக நட்சத்திரங்களை, ஊழியர்களை விழத்தள்ளினவன். ஆனாலும் அவனை இயேசு துரத்தும்போது, அவனிடம் கெஞ்சியோ, அழுதோ, தயவுசெய்து இவனைவிட்டு போய்விடு என்று சொல்லியோ, கூச்சலிட்டுக்கொண்டோ இருக்கவில்லை.

பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, இயேசுவுக்கு எதிராக வந்தார்கள். அந்த பிசாசுகள், எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். பிசாசுக்கு ஒரு முடிவு உண்டென்றும், அவனுக்கென்று நித்திய அக்கினிக்கடல் உண்டென்பதையும் பிசாசு நன்றாக அறிந்துவைத்திருக்கிறான். ஆனால், இன்றைய கிறிஸ்தவர்களுக்கு நித்திய அக்கினி, நித்திய நகரம் போன்றவற்றை பற்றி அறிய மனதில்லை.

மத்தேயு 17ல், சீஷர்கள் ஒரு பையனை அழைத்துக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள், அவனிடமிருந்த பிசாசை அவர்களால் துரத்த முடியவில்லை. இயேசு ஒரு வார்த்தை மட்டும் சொன்னார், பிசாசு வெளியே வந்தது (மத் 17:18), அதனால், சீஷர்கள் ஏன் அதைத் துரத்த முடியவில்லை என்று கேட்டார்கள். காரணம் அவர்களுடைய விசுவாசம் குறைவாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் விசுவாசம் குறைவாக இருக்கும்போது, ​​நீங்கள் அழலாம், கத்தலாம், மக்களின் தலைமுடியைப் பிடுங்கலாம், உபவாசம் இருந்து ஜெபிக்கலாம், ஆனால் எதுவும் நடக்காது. ஒரு ஊழியக்காரர், ஒருவருக்குள் இருக்கும் பொல்லாத ஆவியை வெளியேற்ற, மிளகாயை மெழுகுவத்தியில் சுட்டு, அதிலிருந்து வரும் புகையை, அந்த நபரின் மூக்கு வழியாக முகரும்படி செய்வாராம். அப்பொழுது அந்த நபருக்கு வரும் தும்மல் மூலமாக, அவனுக்குள் இருக்கும் பொல்லாத ஆவி வெளியேறிவிடுமாம். இப்படியெல்லாம் வேதத்திற்கு ஒவ்வாத விதத்தில் பிசாசை துரத்த பலர் முயலுகிறார்கள்.

முழு வேதாகமத்தை பார்த்தால், எந்தவொரு இடத்திலும் இயேசு பிசாசை துரத்த மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை சொல்லவில்லை. அவர் ஒரு முறை கட்டளையிட்டாளே, பிசாசுகள் நடுங்கி ஓடிவிடும், கீழ்ப்படியும். நாமும் பிசாசை சாட்சியின் வசனத்தின் மூலம், ஒரு வார்த்தை சொன்னாலே, அவைகள் ஓடும் என்ற விசுவாசம் நமக்குள்ளாக காணப்பட வேண்டும். இன்று சாத்தான் தோற்கடிக்கப்பட்டான், ஒவ்வொரு பேயும் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டது. இயேசுவின் நாமத்தைக் கேட்டு நடுங்காத ஒரு பேய் இருக்க முடியுமா? தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.(யாக் 4:7) என்று வசனம் கூறுகிறது.

முதலில் தேவனுக்கு கீழ்ப்படியுங்கள். பலர் யாக் 4:7 இன் இரண்டாம் பாதியை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்கள். உங்கள் முழு வாழ்க்கையும் தேவனுக்கு கீழ்ப்படிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் பிசாசை எதிர்க்கலாம். வாக்குறுதி என்னவென்றால், பிசாசு விலகிச் செல்ல மாட்டான், ஆனால் அவன் ஓடிவிடுவான். பிசாசு உங்களுக்கு அருகில் எங்கும் இருக்க மாட்டான். இந்த வாக்குறுதி உண்மை, அது உங்களுக்கு உண்மையாக இல்லாவிட்டால், நீங்கள் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை என்று அர்த்தம். ஆகையால் தேவனுக்கு கீழ்ப்படிந்து, பிறகு, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலே, பிசாசு உங்கள் எல்லைகள் எங்கும் தன்னுடைய வாலை ஆட்டமுடியாது. அவன் ஓடிப்போவான்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *