யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
நாம் ஆராதிக்கிற தேவன் வியாதியை விலக்கிப் போடுகிறவர். உலகத்தில் இருக்கிற வியாதிகளில் அநேக வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தார்கள், அநேக வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஒருவேளை மருந்து இருந்தாலும், நாம் மருத்துவரிடம் செல்லும்போது, இந்த மருந்தைச் சாப்பிடுங்கள், வந்த வியாதி ஒரு சில நாட்களில் போய்விடும் என்று சொல்லுவார்கள். எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் நான் உன் நோயை குணமாக்குவேன் என்று சொல்வதில்லை. வேறு எவராலும் சொல்ல முடியாத அல்லது வாக்கு கொடுக்க முடியாத ஏன் உலகத்தின் எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மாயவித்தைக்காரர்கள் இருந்தாலும் சரி, இயேசு ஒருவரே சொல்லமுடியும் நான் உன் வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்று.
நாகமான் குஷ்டத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். எலிசா தீர்க்கதரிசி அவனை யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கும்படி சொன்னார். ஆரம்பத்தில் நாகமனுக்கு எலிசா சொன்ன காரியம் கோபத்தை வருவிக்கிறதாக இருந்தாலும், கடைசியில் அவன் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவன் ஏழாவது முறை நதியில் மூழ்கி எழுந்திருக்கும்போது, அவனுடைய உடல் சிறு குழந்தையின் சரீரத்தைப் போல மாறிவிட்டது. சிறு கீழ்ப்படிதல் மூலமாக உங்கள் வியாதி உங்களை விட்டுப் போகும்படியாக கர்த்தர் செய்வார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த புறஜாதி பெண் பிறந்த சில மாதங்களில் ஊனமாகப் போனார்கள். அவர்களுடைய பெயர் குல்ஷான் பாத்திமா என்ற குல்ஷான் எஸ்தர். அவருடைய தகப்பனார் அவர்கள் குணமாக வேண்டுமென்று பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். லண்டன் மாநகருக்கு அழைத்துச் சென்று எல்லா மருத்தவ சிகிச்சைகளும் மேற்கொண்டார். ஒன்றும் பலனளிக்கவில்லை. சௌதிஅரேபியா தேசத்திற்கு அழைத்துச் சென்று பல இடங்களுக்குத் தெய்வ நம்பிக்கையோடு அழைத்துச்சென்றார். முடிவாக ஏமாற்றம் தான் கிடைத்தது. இறுதியாகப் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்கள். ஒரு சில மாதங்களில் தான் நம்பின தகப்பனாரும் மறித்துப் போய்விட்டார். அந்த பெண்ணுக்கு கைவிடபட்ட சூழ்நிலை. தான் நம்பும் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அந்த புத்தகம் முழுவதிலும் ஒரே இடத்தில மாத்திரம் தான் அற்புத சுகத்தைப் பற்றி எழுதியிருந்தது. அதுவென்னவென்றால், இயேசு குருடர்களை பார்வையடையச்செய்தார், முடவர்களை நடக்கச் செய்தார், செவிடர்களைக் கேட்கச் செய்தார். குல்ஷான் எஸ்தருக்குள்ளாக ஒரு கேள்வி யார் இந்த இயேசு. அவர் தான் சுகத்தைத் தருகிறவர் என்று இதில் எழுதியிருக்கிறதே யார் அவர், அவரை பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சை அதிகமானது. ஒரு நாள் ராத்திரி, கதவுகள் அடைக்க பட்டது, விளக்கு அணைக்கப் பட்டது. இருதயத்தில் விசுவாசத்தோடு இயேசு என்று கூப்பிட தொடங்கினார்கள். என்னுடைய முடம் நீங்க வேண்டும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார்கள். திடீரென்று அந்த அறை முழுவதுமாக வெளிச்சம் தோன்றியது. கண்ணீரோடு குல்ஷான் ஜெபித்துக்கொண்டிருந்த வேளையில், இயேசு ஆணிகள் கடாவப்பட்ட கரத்தோடு தோன்றி, குல்ஷான் நீ என்னை நோக்கி விசுவாசத்தோடு கூப்பிட்டதால் நான் உன்னைக் குணமாக்க வந்தேன். நானே மெய்யான தேவன், இப்பொழுது எழுந்து நடவென்று சொன்னார். என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட 16 வருடங்களை குணமாகாத வியாதியைக் கர்த்தர் விலக்கிப்போட்டார். அன்றிலிருந்து அவர்கள் இயேசு தான் என் இரட்சகர் என்று உலகமெங்கும் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
குஷ்டரோகி, திமிர்வாதக்காரன், ஜுரத்தோடு இருந்த பேதுருவின் மாமி, குருடர்கள், சப்பாணிகள் இவர்கள் எல்லாரையும் இயேசு குணாக்கினாரென்றால், உங்கள் வியாதியையும் குணமாக அவரால் கூடும். இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, அவர் மேல் நீங்கள் விசுவாசம் வைப்பீர்களென்றால், எப்பேர்ப்பட்ட வியாதியையும் அவர் நீக்குவார்.
யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் நோய்களை விலக்கி, விடுதலை தருவராக. ஆமென்.
Robert Jegadheesh
Word of God Church
Doha – Qatar
www.wogim.org