சுத்த சொற்கள் (Pure Words)

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது (சங். 12:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/avLfCEMcVjs

தாவீது தன்னைச் சுற்றிக் காணப்பட்ட தன்னுடைய நண்பர்களின்   வார்த்தைகளைக் குறித்துக் கூறும் போது, அவர்கள் பொய்  பேசுகிற பொய் நாவுகள் உடையவர்கள் என்றும், முகஸ்துதி செய்கிற இச்சக உதடுகள் உடையவர்கள் என்றும், இருமனமுடையவர்கய் இரண்டு விதமாய் பேசுகிறவர்கள் என்றும், பெருமையான வார்த்தைகளைப் பேசி, நாவின் வார்த்தைகளால் யுத்தம் செய்து மற்றவர்களை மேற்கொள்ளுகிறவர்கள் என்றும் கூறினான். ஒருவேளை சவுலின் அரண்மனையில் அவன் காணப்பட்ட வேளையில், அவனைச் சுற்றிக் காணப்பட்டவர்கள், தாவீதிற்கு எதிராய் செயல்பட்ட ராஜாவாகிய சவுலின் தயவைப் பெறுவதற்காக, இப்படிப்பட்ட நாவுகள்  உடையவர்களாய் காணப்பட்டிருக்கக் கூடும். 

இப்படிப்பட்டவர்களோடு, கர்த்தருடைய நாவின் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கிறான், அவருடைய நாவின் சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட  வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது என்று அறிக்கையிட்டான். கொஞ்சம் கூட கலப்படமில்லாத, தவறுகளும் குறைகளும் இல்லாதது கர்த்தருடைய சொற்கள். ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறது. தேவன் பரிபூரணமுள்ளவராய் காணப்படுவது போல, அவருடைய சொற்களும் நூறு சதவிகிதம் நம்பத்தக்கது, பரிபூரணமானது. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன் என்று சங்.119:140 கூறுகிறது. தேவனுடைய வசனமெல்லாம்  புடமிடப்பட்டவைகள் என்று ஆகூர் என்ற புருஷனும் நீதி. 30:5ல் கூறினான். தேவன் பொய்யுரையாதவர்,  அவர் ஒருபோதும் யாரையும் முகஸ்துதி செய்வதில்லை, அவர் உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லையென்றும் சொல்லுகிறவர். அவர் இருமனதோடு, இருநாக்குடையவராய் பேசுவதில்லை. பெருமையின் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து ஒருபோதும் வந்ததில்லை, அவர் தாழ்மையின் சொரூபியாய் காணப்படுகிறவர். அவர் யுத்த வார்த்தைகளையும், கலகத்தின்  வார்த்தைகளையும்   ஒருபோதும் பேசுவதில்லை. இயேசுவின் வாயிலிருந்து சமாதானமுள்ள வார்த்தைகளும் கிருபையுள்ள வார்த்தைகள் மட்டுமே வந்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சுத்த சொற்களை அதிகமாய் நேசியுங்கள்.  எரேமியாவைப் போல, கர்த்தருடைய  வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உணவைப் போல உட்கொண்டுவிடுங்கள். அப்பொழுது அவைகள் உங்களைச் சுத்திகரித்து, உங்களில் சுத்த இருதயத்தை  உண்டாக்கும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று சங்கீதக்காரன் சங். 119:11ல் கூறினான்.  உங்கள் இருதயம் சுத்திகரிக்கப்படும் போது, இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்ற வசனத்தின் படி, உங்கள் இருதயத்திலிருந்து கிருபை பொருந்திய வார்த்தைகளும்,   தாழ்மையின் வார்த்தைகளும்,  அன்பின் வார்த்தைகளும் வெளிப்படும். இருமாப்பின் வார்த்தைகளும், மேட்டிமையின் வார்த்தைகளும், கலகத்தின் வார்த்தைகளும் உங்களை விட்டு அகலும். கர்த்தருடைய சுத்தச் சொற்கள் உங்களை ஆசீர்வதித்து உயர்த்தும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *