கிறிஸ்துவில் நமது நம்பிக்கை (Our hope in Christ).

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல்  நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும்  பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்  (1 கொரி. 15:19)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/y8untCGKTS0

கர்த்தர் கிருபையாய் கொடுத்த இந்த பூமிக்குரிய வாழ்க்கையின் நோக்கமும் குறிக்கோளும் நித்தியத்தைப் பற்றியதாய் காணப்பட வேண்டும். பூமிக்குரிய வாழ்க்கை துரிதமாய் ஒடி முடியும், நித்திய வாழ்வு மட்டுமே நிரந்தரமானது. எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே, அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று மோசேயின்  ஜெபமாகிய சங்.90:10ல் எழுதினான். இளவயதும் வாலிபமும் மாயை என்று சாலொமோன் கூறினான். ஆகையால் தான் நம்முடைய  முற்பிதாக்கள் பரதேசிகளைப் போல இப்பூமியில் வாழ்ந்தார்கள். ஆபிரகாம் நிலையற்ற கூடாரத்தில் வாழ்ந்து, நிலையான அஸ்திபாரமுள்ள புதிய எருசலேமிற்காக அவன் காத்திருந்தான்.

இம்மைக்குரிய இவ்வாழ்க்கையின் தேவைகளைக் கர்த்தர் கிருபையாய் தருகிறார். ஒரு நாள் பேதுரு இயேசுவைப் பார்த்து எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு இயேசு, என்னிமித்தமாகவும்,  சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,  இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடே கூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  கர்த்தரைப் பின்பற்றுகிற உங்கள் ஒவ்வொருவருடைய தேவைகளையும் அவர் சந்திக்க வல்லமையுள்ளவர். அவரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையும் ஒரு போதும் குறைவுபடாது. ஐசுவரியமும், கனமும், ஆரோக்கியமும், சமாதானமுள்ள வாழ்வும் அவரிடத்திலிருந்து வருகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் போது, மற்ற எல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அருளிச் செய்யவார். ஆனால் இம்மைக்குரிய நன்மைகளுக்காக மாத்திரம் நாம்  இயேசுவைப்  பின்பற்றவில்லை. அப்படிச் செய்தால் மற்ற எல்லாரை விட நாம் பரிதபிக்கதக்கவர்களாகக் காணப்படுவோம்.  யூதாஸ்  இம்மைக்காக இயேசுவைப் பின்பற்றினான், அவனுடைய முடிவு பரிதாபத்திற்குரியதாக இருந்தது. 

இம்மையை விட, மறுமைக்குரிய ஜீவியம் நமக்கு மிகவும் முக்கியமானது. அது தான் நாம் கிறிஸ்துவின்  மேல் வைத்திருக்கிற நம்பிக்கையின் மேலான பாக்கியமாய் காணப்படுகிறது. கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களைச் சேர்த்துக் கொள்ளும் படிக்குத் துரிதமாக வரப்போகிறார். அவரோடு கூட இந்த பூமியில் நாம் ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்யப் போகிறோம். அதன்பின்பு யுக யுகமாய் அவரோடு கூட புதிய எருசலேமில் வாழப்போகிறோம். அங்கே கவலையில்லை, கண்ணீரில்லை, யுத்தமில்லை, அலறுதலில்லை.  இஸ்ரவேல் தேசத்தை மையப்படுத்தி இந்த பூமியில் நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் ஆண்டவர் வாசல்படியில் வந்து விட்டார் என்பதை அறிவிக்கிறது. யோவான்ஸ்நானன்  காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது,  பலவந்தம் பண்ணுகிறவர்கள்  அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் என்று இயேசு மத்.11:12ல் கூறினார். வைராக்கியமுள்ளவர்களும், வாஞ்சையுள்ளவர்களும்,  ஆயத்தப்படுகிறவர்களும், முயற்ச்சி  செய்கிறவர்களும் அதில் பிரவேசிப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே நித்தியத்திற்குரிய காரியங்களில் அதிக நாட்டம் கொள்ளுங்கள். பரிசுத்தமும், நீதிக்குரிய ஜீவியமும் செய்யுங்கள். அப்போது ஆண்டவரோடு கூட நித்திய வீட்டில் நிரந்தரம் வாழலாம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *