செத்த ஈக்கள்.

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். பிரசங்கி 10:1.

ஈக்கள் மிகவும் சிறியவைகள். பொதுவாக சிறியவைகளை நாம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் சிறியவைகள் மிகவும் ஆபத்தானவைகள் என்று வேதம் எச்சரிக்கிறது. சிறிய ஈக்கள், நன்கு வாசனை வீசுகிற, விலையுயர்ந்த பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப் பண்ணும். குழிநரிகளும், சிறுநரிகளும் பூவும் பிஞ்சுமாயிருக்கிற திராட்சத்தோட்டங்களைக் கெடுத்துவிடும் (உன். 2:15). ஆகையால், சிறிய ஒரு தவறு, சின்னக் காரியங்கள் என்று நாம் அற்பமாய் எண்ணுவது பெரிய அழிவைக் கொண்டுவந்துவிடும்.

உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள் (உன். 1:3) என்று இயேசுவின் நாமம் வாசனை வீசும் பரிமளதைலம் என்று எழுதப்பட்டிருக்கிறது.  கிறிஸ்துவை அறிந்த நாம் அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆகையால் செத்த ஈக்களுக்கு இடங்கொடுத்து நற்சாட்சியை இழந்துவிடாதிருங்கள். யாக்கோபின் குமாரர்களான சிமியோனும் லேவியும், கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் யாக்கோபின் வாசனையைக் கெடுத்து அவனைக் கலங்கப்பண்ணினார்கள் (ஆதி. 34:30).

ஈக்கள் தைலக்குப்பிக்கு உள்ளே நுழைவதற்குத் திறப்பு அவசியம். திறப்புகள் இல்லையென்றால் ஈக்கள்  உள்ளே நுழைவது இயலாதக் காரியம். ஒரு சிறிய ஆணி ஒரு வாகனச் சக்கரத்தில் ஒரு திறப்பை உருவாக்கி செயலற்று போகப்பண்ணிவிடும். அதுபோல சத்துருவுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் கூட அவன் திறப்புகளை உருவாக்கி விடுவான்.  ஆகானுக்கு சாபத்தீடான பாபிலோனிய சால்வையின் மேல் இச்சையை உருவாக்கி, அதனிமித்தம் யோசுவாவின் சேனையைத் தோற்றுப் போகச்செய்தவன். பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான் (பிரசங்கி 9:18). கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும் (1 கொரி. 5:6). ஒரு குடும்பத்தில், ஒரு சபையில், யாராகிலும் ஒருவர் உருவாக்குகிற திறப்பு கூட, எல்லாருக்கும் தோல்வியைக் கொண்டுவந்துவிடும். ஆகையால் தான் பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. தேவனுக்கு கீழ்படிந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் உங்களைவிட்டு ஓடிவிடுவான்.

கர்த்தருடைய பிள்ளைகளே, செத்த ஈக்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உங்களையும், உங்கள் குடும்பங்களிலும் சத்துரு திறப்புகளை உருவாக்கி உங்கள் வாசனையை, கிறிஸ்துவின் நற்சாட்சியைக் கெடுத்து விடாதபடிக் கவனமாயிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *