தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்(சங். 27:5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-t81gRVppao
கர்த்தருடைய கூடாரத்தில் தங்குகிறவர்களுக்கும், அவருடைய சமூகத்தைத் தேடுகிறவர்களுக்கும் அவர் வைத்திருக்கிற ஒரு விஷேசித்த ஆசீர்வாதத்தையும், பாதுகாப்பையும் குறித்து மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. கர்த்தருடைய கூடாரம் என்பது இந்த இடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் குறிக்கிறது. தாவீதுக்கு அனேக எதிரிகள் காணப்பட்டார்கள். அவனைக் கொல்லும் படிக்கு கோலியாத் ஆர்ப்பரித்து எழுந்தான், பின்பு சவுல் மற்றும் பெலிஸ்தியர்களும் எழும்பினார்கள். என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்கினார்கள் என்று இதே சங்கீதம் 27:2ல் அவன் எழுதுகிறதைப் பார்க்கிறோம். ஆனால் தாவீதுடைய வாஞ்சை முழுவதும் கர்த்தருடைய ஆலயமாய் காணப்பட்டது. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்றும் இதே சங்கீதம் 27:4ல் எழுதுகிறான். ஆகையால் அவனுடைய தீங்கு நாட்களில் அவனைக் கர்த்தர் தன்னுடைய கூடார மறைவில் ஒளித்து வைத்துப் பாதுகாக்கிறவராய் காணப்பட்டார். தாவீது தன்னைக் கர்த்தர் பாதுகாத்த விதத்தை எண்ணி கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். தன்னுடைய தலை சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்பட்ட வேளையில், அவன் மீண்டும் கர்த்தருடைய கூடாரத்தில் வந்து ஆனந்த பலிகளையிட்டு, நன்றி செலுத்தி கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய ஆலயத்தில் நாம் வாஞ்சை வைத்து, அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரை ஆராதிப்பதன் நிமித்தம் அனேக நன்மைகளைக் கர்த்தர் நமக்கு வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது, அவர் எல்லாத் தீங்குக்கும் நம்மை விலக்கிப் பாதுகாக்கிறார். பலவிதமான பிரச்சனைகள் இந்நாட்களில் காணப்படுகிறது. யுத்தங்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை, தைரியமாய் யாத்திரைகள் செய்ய முடியவில்லை, கொள்ளை நோய்கள் திடீரென்று வருகிறது, விபத்துகள் எங்கும் நடக்கிறது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, அதாவது இழிவான ஜனங்கள் ஆட்சி அதிகாரங்களில் காணப்படும் போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிந்து தீங்கு செய்வார்கள். மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர் என்று சங். 31:20 கூறுகிறது. ஆகையால் கர்த்தருடைய சமூகத்தை ஒருநாளும் அசட்டை செய்துவிடாதிருங்கள். சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல் கர்த்தருடைய சமூகத்தை அதிகமாய் வாஞ்சியுங்கள்.
இந்நாட்களில் ஆலய வாஞ்சை ஜனங்களிடத்தில் குறைந்து கொண்டு வருகிறது. வாலிபர்கள் மாத்திரமல்ல மற்றவர்களுக்குள்ளும் இந்த குறைக் காணப்படுகிறது. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நீங்கள் விட்டுவிடாதிருங்கள் என்ற கர்த்தருடைய ஆலோசனைக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கும் போது, ஒரு தீங்கும் அணுகாதபடிக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவருடைய கூடார மறைவில் ஒளித்து வைத்துப் பாதுகாப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

