சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்(சங். 94:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OxUnnBTYYyo
ஆண்டவர் யாரிடத்தில் அன்பு கூருகிறாரோ அவர்களை சிட்சித்து, தண்டித்து, சீர்படுத்துகிறவர். தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ என்று எபி. 12:7ல் எழுதப்பட்டிருக்கிறது. அவர் எப்பொழுதும் தன்னுடைய பிள்ளைகளோடு வசனத்தின் மூலமாகப் பேசுகிறவர். அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து தங்களைச் சரிசெய்து கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், பாக்கியவான்களாய் காணப்படுவார்கள்.
தாவீது ஜனங்களைத் தொகையிடும்படிக்கு சாத்தானால் ஏவப்பட்டான். அவன் சத்துருவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, ஆண்டவரோடு விசாரிக்காதபடிக்கு ஜனங்களைத் தொகையிடும்படிக்கு யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் அனுப்பினான். நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும் படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று கட்டளையிட்டான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததாய் காணப்பட்டது. ஆகையால் அவர் இஸ்ரவேல் ஜனங்களை வியாதியினால் வாதித்தார். அத்துடன் அவர் காத் தீர்க்கதரிசியை அனுப்பி தாவீதின் தவற்றை அவனுக்கு உணர்த்தின வேளையில், அவன் தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன், பொல்லாப்பு நடப்பித்தேன், இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்று ஆண்டவரை நோக்கி முறையிட்டான். அவன் ஆண்டவருடைய சிட்சையை ஏற்றுக் கொண்டு தன் தவற்றைச் சரிசெய்தான். ஆகையால் வாதை நிறுத்தப்பட்டது, ஜனங்கள் திரும்பவும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆனால் அவன் குமாரனாகிய சாலொமோன் புறஜாதி ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து, பிரமாணத்திற்குப் புறம்பாய் அனேகரை விவாகம் செய்தான். இரண்டு முறை கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நீ செய்கிற காரியங்கள் தவறு என்று போதித்தும் அவன் கர்த்தருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாமல் அதைத் தள்ளிவிட்டான். அதின் விளைவு எல்லாம் மாயை மாயை என்று புலம்பி, சமாதானம் என்ற தன் பெயரின் அர்த்தத்தைக் கொண்டவன், சமாதானமில்லாமலே மரித்துப் போனான். அதுபோல யோவான் ஸ்நானகனுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். ஆனால் நியாயப்பிரமாணத்தைக் கற்ற பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள் என்று லூக்கா 7:29,30 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களை நடத்துகிற ஊழியர்களும் உங்களை சிட்சித்து, புத்திமதிகளைக் கூறி, வேதத்தைக் கொண்டு போதிக்கும் போது அவற்றைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களைப் பாக்கியவான்களாய் மாற்றி, கர்த்தருடைய வருகையில் கொண்டுபோய் நிறுத்தும். கிறிஸ்தவத்தில் கவர்ச்சிகரமான வேறொரு உபதேசம் பெருகிக் காணப்படுகிற இக்கால கட்டத்தில் வசனத்தை மையப்படுத்தி பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்துக் கண்டித்து உணர்த்திப் போதிக்கிறவர்களை அனேகர் விரும்புவதில்லை. நீங்கள் அப்படிப்பட்டவர்களாய் காணக்கூடாது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

