முகஸ்துதி என்ற கண்ணி (The snare of flattery)

பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்(நீதி. 29:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/i8yyBJm0kck

 பிறனை முகஸ்துதி செய்கிறவன், தன்னுடைய சுய லாபத்திற்காக அப்படிச் செய்கிறான். முகஸ்துதியின் வார்த்தைகளைப் பேசுகிறவர்களுக்குள் இரண்டு மனது காணப்படும் என்று சங். 12:2 கூறுகிறது. ஒரு மனது புகழ்ச்சியின் வார்த்தைகளைப் பேசி கேட்கிறவர்களை உசுப்பேற்றும், இன்னொன்று கேட்கிறவனுடைய கால்களுக்குக் கண்ணிகளை வைப்பதைப் பற்றி யோசிக்கும். ஒருவனை உற்சாகப்படுத்துவது என்பதும் முகஸ்துதி செய்வதென்பதும் வெவ்வேறானவை. பர்னபா என்ற பெயரின் அர்த்தம் உற்சாகப்படுத்துகிறவன் என்பதாகும். அவன், சவுல் என்ற பவுலைக் குறித்து, மற்றவர்கள் சந்தேகத்துடன் பார்த்த வேளையில், பர்னபா அவனை உற்சாகப்படுத்தி தைரியத்தோடு அப்போஸ்தலர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தான். பிற்காலத்தில் பவுல் ஒரு பெரிய அப்போஸ்தலனாய் மாறினான்.   முகஸ்துதியின் வார்த்தைகள் கேட்பதற்கு  இன்பமாயிருக்கும், மேட்டிமையின் இருதயத்தோடு காணப்படுகிறவர்களுக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேனைப் போல இனிக்கும். அப்படிப்பட்ட  வார்த்தைகளைப் பேசினவர்களைத் தங்கள் உள்வட்டத்திற்குள் கொண்டுவந்து நட்பு பாராட்டுவார்கள். அவர்களோடு ஐக்கியமாய் காணப்படுவார்கள். கடைசியில், முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும் என்ற நீதி. 26:28ம் வசனத்தின் படி வேதனையையும், அழிவையும் சந்திப்பார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகள் யாரிடத்திலும் முகஸ்துதியின்  வார்த்தைகளைப் பேசக்கூடாது. உங்கள் வார்த்தைகள் ஆம் என்றும் ஆமென் என்றும் காணட்டும். குறிப்பாக ஊழியத்தின் பாதையில் காணப்படுகிறவர்களுடைய தாலந்துகளை வைத்து முகஸ்துதியின் வார்த்தைகளை அவர்களிடம் பேசாதிருங்கள். நீங்கள் அழகாக பாடுகிறீர்கள், ஆழமான செய்திகளைக் கொடுக்கிறீர்கள், உங்களில் வரங்கள் அதிகமாகக் கிரியை செய்கிறது என்று பேசி, அவர்களை மேட்டிமை என்ற கண்ணியில் சிக்க வைக்காதிருங்கள். எலிகூ என்ற வாலிபன், நான் முகஸ்துதி  பேச அறியேன், பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார் என்று யோபு 32:22ல் கூறினான். இச்சகவார்த்தை என்னும் முகஸ்துதியின்  வார்த்தைகளைப் பேசினால்   ஆயுள் குறுகினது என்று மேற்குறிப்பிட்ட கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. 

மேலும் முகஸ்துதியின் வார்த்தைகளைப் பேசுவது நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் நாம் வைக்கிற அழிவின் கண்ணி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தானியேலை வீழ்த்துவதற்கு அவனுக்கு விரோதமாய் மற்ற பிரதானிகள் சதித்திட்டம் தீட்டினார்கள். அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. ஆகையால் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி;, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று தரீயுவிடம் கூறினார்கள். அவனும் அவர்களுடைய முகஸ்துதியின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல், மேட்டிமை கொண்டு அந்த சட்டத்திற்கு கையெழுத்துப் போட்டான். ஆனால் தானியேல் எப்பொழுதும் போல, தேவனை நோக்கி மூன்று வேளை ஜெபித்தான். அதனிமித்தம் சிங்கக்கெபியில் போடப்பட்டான், சிங்கங்கள் அவனைச் சேதப்படுத்தா படிக்குக் கர்த்தர் அவைகளின் வாய்களைக் கட்டிப் போட்டார். கடைசியில், தானியேலின்மேல்  குற்றஞ்சாட்டின மனுஷரை ராஜா கொண்டுவரச்சொன்னான், அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள், சிங்கங்கள் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி பட்சித்துப் போட்டது. அவர்கள் முகஸ்துதி செய்து தங்களுக்கு தாங்களே கண்ணிகளை வைத்தார்கள். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *