இயேசுவின் ரத்தம் சமீபமாக்கும்.

எபேசியர் 2 : 13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

முன்னே தூரமாயிருந்தோம். எவ்வளவு தூரம் என்று கேட்டால் ஒவ்வருவரும் பல கோடி மைலுக்கு அப்பால் இருந்தோம் என்று தான் சொல்லுவோம். காரணம் நம்முடைய பாவமே அவரையும் நம்மையும் பிரிந்துவிட்டது. பிரித்த அந்த தடுப்பு சுவரை உடைத்தெறியவே இயேசு இந்த உலகத்தில் வந்தார்.

மனித குலத்தையும், பிதாவாகிய தேவனையும் ஒன்றிணைத்து கிறிஸ்துவின் ரத்தமே. அவர் ரத்தம் சிந்தி நம்மை மீட்டெடுக்கவில்லையென்றால் நாமெல்லாரும் என்றோ அழிவுக்குள்ளாகி போயிருப்போம். இன்றும் இயேசு நமக்காக பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவரும் கெட்டு போவது பிதாவின் சித்தமல்ல என்று வேதம் சொல்லுகிறது.அவர் சிந்தின ரத்தம் விலையேற்றப்பட்டது. அந்த ரத்தத்தில் வல்லமையுள்ளது. இன்று சாத்தன் நடுங்கக்கூடிய காரியம் இயேசுவின் ரத்தம். நீங்கள் இயேசுவின் ரத்தத்திற்குள்ளாக வந்துவிட்டீர்களென்றால், சத்துருவால் உங்களை ஒருபோதும் தொடமுடியாது. எப்பொழுது இயேசுவின் ரத்தத்திற்கு வெளியே போகிறீர்களா, சத்துரு உங்களை எளிதாக வீழ்த்திவிட முடியும். ஒவ்வொரு நாளும் உங்களையும் உங்கள் குடுப்பதையும் இயேசுவின் ரத்தத்திற்குள்ளாக கொடுத்து ஜெபியுங்கள். அப்படி செய்வீர்களென்றால் எதிர்பாராத விபத்து, எதிர்பாராத இயற்கை சீற்றம், எதிர்பாராத சூழ்நிலைகள், எதிர்பாராத சிக்கல், பாவம், சாபம், இவையெல்லாவற்றிலும் இருந்து பாதுகாக்க படுவீர்கள்.

ஒரு நபர் நடுராத்திரியில் ஒரு வீதியில் நடந்து செல்லும்போது, ஏதோ அந்தகார கிரியைகள் அவனை பயம்படுத்துவதாக உணர்ந்தார். சுற்றி பார்த்தால் யாரும் அங்கு இல்லை. தொடர்ந்து வேகமாக நடந்துபோனார். திடீரென்று ஒரு இருள் சூழ்ந்த பகுதி, நாய்களின் சத்தம், பூனை, தவளை போன்ற உயிரினங்களின் சத்தம் இதனால் மிகவும் பயமடைந்தவனாக காணப்பட்டான். யாரும் உதவிக்கு வருமாறு இல்லை. இருளின் ஆதிக்கங்கள் சூழ்ந்திருந்த நேரம். அப்பொழுது யாரோ ஒரு போதகர் பல வருடங்களுக்கு முன்பாக சொன்ன வார்த்தை அவருக்கு திடீரென்று ஞாபகத்தில் வந்தது. எந்த பயமுறுத்தல்களும் வாழ்க்கையில் ஏற்பட்டால் ஒரே ஒரு வார்த்தை வாயினால் அறிக்கையிடுங்கள்; அந்த வார்த்தை இயேசுவின் ரத்தம் ஜெயம் என்பதாக. இதை நினைவில் கொண்டு அந்த நபர் உடனே தன்னுடைய வாயால் இயேசுவின் ரத்தம் ஜெயம் என்ற உரக்க சத்தத்தோடு சொன்னார். உடனே அவருக்குள்ளாக இருந்த பயத்தின் ஆவிகள் ஓடியது; இருளின் ஆதிக்கங்கள் விலகியது. நிம்மதியாக ஒரு சேதமும் இல்லாமல் வீட்டுக்கு கடந்து சென்றார். இயேசுவின் ரத்தத்தில் மாத்திரமே பாதுகாப்பு. அவருடைய ரத்தம் சாத்தானை நடுங்க செய்யும்.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மத்தேயு 26:28 ). பாவமன்னிப்பு உலகத்தில் எங்கு சுற்றி தீர்ந்தாலும், எவ்வளவு பணத்தை செலவழித்தாலும் உண்டாகாது. இயேசுவின் ரத்தத்தை தவிர வேறொரு காரியங்களும் ஒருவனுக்கு மன்னிப்பை கொடுத்து பரிசுத்தமாய் வாழ செய்யாது. கால்நடையாக எங்கு போனாலும், எங்கு மூழ்கினாலும் ஏன் கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலம் என்று சொல்லப்படுகிற இஸ்ரவேலுக்கு கடந்து வந்தாலும் பாவ மன்னிப்பு உண்டாகாது. கிறிஸ்துவின் ரத்தம் ஒன்றே மன்னிக்கும். அவர் ஒருவரே மன்னிப்பதற்கு தயை பெருத்திருக்கிறார்.

அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் (எபிரெயர் 13:12). உலகத்தில் தேவர்களென்று சொல்லப்படுகிற எந்த காரியங்களும் மனித குலத்திற்காக ரத்தம் சிந்தவில்லை. இயேசு ஒருவர் மாத்திரம் தான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தம்முடைய பரிசுத்த ரத்தத்தை நகர வாசலுக்கு புறம்பே சிந்தினார்; ஒவ்வொருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார்; ஒவ்வொருக்காகவும் அவர் அந்த கேடு அடைந்தார்; ஒவ்வொருவருக்காக அடிக்கப்பட்டார்; ஒவ்வொருக்காகவும் நிந்திக்கப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்; குற்றுயிராக்கப்பட்டார்; தூஷிக்கப்பட்டார்; இகழப்பட்டார்; முள் முடி சூட்டப்பட்டார்; நிர்வாணமாய் தொங்க விடப்பட்டார்; சிலுவையில் அறையப்பட்டார்; முழு ரத்தத்தையும் ஊற்றி கொடுத்தார். காரணம் தூரமாயிருந்த நம்மை அவருக்கு சமீபமாய் கொண்டு வரும்படியாக !. கிறிஸ்துவின் ரத்தத்திற்குள்ளாக வந்துவிடுங்கள்; அவர் உங்கள் சமீபமாயிருப்பர்.

நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென் (வெளி 1:6 ).

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *