ஆராய்ந்துபாருங்கள்.

நீதி-25:2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு மறைவான காரியங்கள் ஒன்றுமில்லை. ஆகிலும் காரியங்களை மறைத்து வைக்கிறவர். மறைவானவைகள் எல்லாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்(உபாகமம் 29:29).  ஆனால் ராஜாக்கள் அதிகாரம் படைத்தவர்களாய் இருந்தாலும் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அல்ல. ஆகையால் ஒவ்வொரு காரியங்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் ராஜாக்கள் என்று வேதம் கூறுகிறது.  நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக (வெளி. 1:6). கர்த்தருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்ட ராஜரீகமான ஆசாரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வேதம் அழைக்கிறது.  நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (1பேது-2:9).  ஆகையால் ஒவ்வொரு காரியங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதுவே நம்முடைய மேன்மையாகக் காணப்படுகிறது.

வேதவாக்கியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே (யோவா. 5:39). தானியேலின் நாட்களில் புதைபொருளாகவும்; முத்திரிக்கப்பட்டும் இருந்த வார்த்தைகள், கடைசி நாட்களில் எல்லாரும் அறிந்துகொள்ளுவதற்காக நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை ஆராய்ந்து பார்க்கும்போது மறைந்திருக்கிற புதைப் பொருட்களை கர்த்தர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும், என்று ஏசாயா 34:16-ல் வாசிக்கிறோம். தேடி, ஆராய்ந்து வாசிக்கும்போது, அதற்கு இணையான கர்த்தருடைய வார்த்தைகளை கண்டுகொள்ளமுடியும். மேலும், கர்த்தருடைய வார்த்தைகள் இயேசுவைக் குறித்து சாட்சிகொடுப்பதினால், அவரைக்குறித்து அதிகமாய் அறிந்துகொள்ளுவதற்கு உதவிசெய்யும். கர்த்தருடைய வார்த்தை கண்ணாடிக்கு ஒப்பாக காணப்படுவதால், நம்முடைய குறைகளை சுட்டிக் காட்டி, நம்மை சரிப்படுத்தி, இயேசுவின் சிந்தையைத் தரித்து, அவருடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றும். எல்லாவற்றிற்கும் மேலாக நித்திய ஜீவனை அருளிச்செய்யும். ஆகையால் வேத வார்த்தைகளை நேசித்து, வாசித்து, ஆராய்ந்து பார்க்க நம்மை அற்பணம் செய்வோம். 

மனுஷர்களுடைய உபதேசங்களை, அவர்கள் வார்த்தைகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பவுலும், சீலாவும் பெரோயா பட்டணத்தில் ஊழியம் செய்த நாட்களில், அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள். பவுலின் உபதேசத்தைக் கூட ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். கடைசி நாட்களில் உபதேசங்களை ஆராய்ந்து, பகுத்தறிய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்போஸ்தலனாகிய யோவான், ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள் (2 யோவான் 1:10) என்று கூறுகிறார். அவர்களை ஏற்றுக்கொண்டு, வாழ்த்துதல் சொன்னால் அவர்களுடைய துர்க்கிரியைகளுக்கு பங்குள்ளவர்களாகிறோம். அவர்களுடைய பாவங்களில் பங்குதாரர்களாக மாறி, நாமும் பாவம் செய்கிறோம் என்று எச்சரிக்கிறார். கடைசி நாட்களில் உபதேசங்களையும், மனுஷர்களுடைய கிரியைகளையும் ஆராய்ந்து அறியாததினால், பாவங்களில் விழுந்து தங்கள் நித்தியத்தை இழந்து போன ஜனங்களின் எண்ணிக்கை மிகுதி. ஆகையால், வேதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காரியங்களையும், மனுஷர்களுடைய வார்த்தைகளையும் ஆராய்ந்து அறிந்து மனுஷர்களுடைய கண்ணிகளிலிருந்து நாம் தப்புவதற்குக் கர்த்தர் நமக்கு உதவிசெய்வார். 

ஆவியான தேவன் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.  தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் (1 கொரி. 2:10,11).  தேவனுடையவைகளை நாம் அறிவதற்குத் தேவ ஆவியானவருடைய அபிஷேகத்தின் நிறைவு மிகவும் அவசியம். ஆவியானவருடைய ஆலயமாக நாம் காணப்படும்போது, அவர் நம்மில் தங்கி வாசம் செய்யும்போது, தேவசித்தித்தின் மையத்தில் வைத்து நம்மை நடத்துவார். அவருடைய வரங்களில் ஒன்று ஆவிகளைப் பகுத்தறிதலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு காரியங்களையும்  ஆராய்ந்து, பகுத்தறிந்து காரியங்களைச் செய்வதற்கு ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். எல்லாவற்றையும்  சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் (I தெச. 5:21).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Aarainthu Ariyum, Uthamiyae Vol. 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *