ஆசீர்வாதமான மழை பெய்யும் (There shall be showers of blessing)

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன், ஆசீர்வாதமான மழை பெய்யும் (எசே. 34:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Qj1-O7tP-w8

பாபிலோனியச் சிறையிருப்பின் நாட்களில் காணப்பட்ட  யூதாவின் ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் கொடுத்த   வாக்குத்தத்த வசனமாக மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. அவர்கள் சிறையிருப்பின் நாட்கள் முடிந்தபின்பு தங்கள் தேசத்திற்குத் திரும்பி வந்து, ஆலயத்தை மறுபடியும் எடுத்துக்கட்டி, தேசத்தில் வாசம் பண்ணும் போது அவர்களுக்கு ஆசீர்வாத மழையை வருஷிக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். ஆயிரம் வருட அரசாட்சியிலும் தாவீதின் குமாரனாகிய இயேசு நம் நடுவில் ராஜாவாயிருப்பார், அந்நாட்களிலும் கர்த்தருடைய பிள்ளைகள் மனமகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் காணப்படுவார்கள், அவர்கள் நடுவில் ஆசீர்வாத மழை பெய்யும் என்பதையும் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தை குறிக்கிறதாய் காணப்படுகிறது. அதுபோல இந்தப் பூமிக்குரிய நம்முடைய அனுதின வாழ்க்கையிலும்,   மழை பெய்யும் போது செழிப்பு உண்டாவது போல, கர்த்தருடைய ஆசீர்வாத மழை பெய்யும்.  அப்போது தெய்வீகத் தயவும் நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும்,   நீங்கள் உயர்ந்து வாழ்ந்திருப்பீர்கள்.

தேவ ஆவியானவர் நம் நடுவில்  மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப் போலவும் வருவார் என்று ஒசியா 6:3 கூறுகிறது. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். அப்பொழுது நீங்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள  அலரிச்செடிகளைப்போல  வளருவீர்கள் என்றும் கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். எலியாவின் நாட்களில் உள்ளங்கை மேகம் தோன்றி பின்பு பெருமழையாய் பொழிந்ததைப் போல, இந்தக் கடைசி நாட்களில் ஆவியானவருடைய அபிஷேக மழை எங்கும் திரளாய் பொழிகிறது.   

ஆவியானவருடைய அபிஷேக மழை பின்மாரியாய் பெய்யும் போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் எழுப்புதல் உண்டாகும். உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில் கர்த்தர் எசேக்கியேலை அழைத்துக் கொண்டு சென்ற வேளையில், எலும்புகள் உலர்ந்து காணப்பட்டதைப் போல ஜனங்களின் ஆவிக்குரிய நிலை உலர்ந்து காணப்பட்டது. ஆவியானவருடைய அசைவு அவைகள் மேல் வந்த போது, எலும்புகள் ஒன்று சேர்ந்தது, தசைகள் உண்டாகி, நரம்புகள் இணைந்து சேனையாய் எழும்பி நின்றார்கள். அப்படிப்பட்ட ஓர் எழுப்புதல் இந்த கடைசி நாட்களில் ஆவியானவரின் மூலம் சபைகளில் தோன்றி, ஜனங்களின் உலர்ந்த நிலைமைகளையும், மந்த நிலைமைகளையும் மாற்றுவது நிச்சயம். அதுபோல பூமிக்குரிய ஜீவியத்திலும் நன்மைகள் உண்டாகும். கர்த்தர், ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும்,   உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற உபா.28:12ம் வசனத்தின்படி, உன்னதத்திலிருந்து உங்கள் மேல் ஆவி   ஊற்றப்படும் போது நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *