உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன், பூர்வ நாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன், அதினால் நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் (எசே. 36:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YrvEVKQL98Y
தேவன் உங்கள் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவை சம்பூரணமாய் முடியப்பண்ணுகிறவர். நீங்கள் தாழ்வில் உங்கள் வாழ்க்கையைத் துவங்கியிருக்கலாம், ஆனால் உங்கள் முடிவு ஆசீர்வாதமாய் காணப்படும். சாலொமோன் ராஜா கட்டின முந்தின ஆலயம் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டது, அது இடிக்கப்பட்டு பின்னாட்களில் செருபாபேல் அதைத் திரும்ப எடுத்துக் கட்டின வேளையில், அது அவ்வளவு பிரமாண்டமாய் இல்லாதிருந்தும், ஆண்டவர் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று கூறினார். கானாவூர் கலியாண வீட்டில் முந்தின ரசத்தை ருசிபார்த்த பந்திவிசாரிப்புக்காரன், பின்பு பிந்தைய ரசத்தையும் ருசிபார்த்து, அது அதிகச் சுவையுள்ளது என்பதைக் கண்டறிந்து, மணவாளனிடம் நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்று கூறினான். யோபுவுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள், ஆகையால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். ஆனால் கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை இரட்டிப்பாய் ஆசீர்வதித்து கனப்படுத்தினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் முந்தின சீரைப் பார்க்கிலும் பிந்தின சீர் அதிக ஆசீர்வாதமாய்க் காணப்படும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது தாழ்வில் உங்களை நினைத்த தேவனை அதிகமாய் துதித்து, அவரை சார்ந்து ஜீவிக்கப் பழகுங்கள். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது என்று சங்கீதக்காரன் சங். 136:23ல் கூறினான். அனேக நேரங்களில் நம்முடைய தாழ்வில் நமக்கு உதவி செய்து உயர்த்தின தேவனை, ஐசுவரியம் விருத்தியாகும் போதும், அந்தஸ்துகள் பெருகும் போதும் மறந்து விடுகிறோம். ஐசுவரியத்தையும், நன்மையையும் தருகிற ஆண்டவரை மறந்து, அவர் கொடுத்த ஆசீர்வாதங்கள் மேல் கண்களைப் பதியவிட்டுத் திசைமாறுகிறோம். கழுதைகளைத் தேடிப் போன சவுலை, இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவனை, பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் அற்பமான குடும்பத்தைச் சேர்ந்தவனை, கர்த்தர் கிருபையாய் தன்னுடைய ஜனங்களின் மேல் முதல் ராஜாவாக காணப்படும் படிக்குத் தெரிந்தெடுத்து உயர்த்தினார். நாட்கள் சென்ற போது, அவனுடைய கண்கள் ஐசுவரியங்கள் மேலும், ஜனங்கள் மேலும் பதிந்தது. ஆகையால் அவனுடைய முடிவில் ஆசீர்வாதமும், நற்சீரும் காணப்படவில்லை. கர்த்தரைச் சார்ந்து, அவருடைய கிருபையையும் ஈவுகளையும் உணர்ந்து, அவரை அண்டிக் கொண்டு நீங்கள் வாழும் போது, உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தரித்திரங்களும், நஷ்டங்களும், பற்றாக்குறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். உங்கள் மாராக்கள் மதுரமாக மாறும், உங்கள் குறைவுகள் நிறைவாக மாறும், உங்கள் பின்னிலமை நற்சீர் பொருந்தியதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமாய் மாறும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

