ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 9:23-24).
உலகம் அனேகக் காரியங்களை மேன்மையாக கருதுகிறது, தேசத்தின் தலைவனாய் காணப்பட்டால் மேன்மையாகப் பார்க்கிறது, ஐசுவரியவானாய் காணப்பட்டால் ஜனங்கள் மேன்மையாக நினைக்கிறார்கள். அறிவியல் மேதைகள், சினிமா நட்சத்திரங்கள், அதிகாரம் படைத்தவர்களை உலகத்தின் குடிகள் உயர்ந்தவர்களாகப் பார்க்கிறார்கள். நம்முடைய திறமைகள், ஜாதிகள், சார்ந்திருக்கிற சபைப் பிரிவுகள் இவைகளை வைத்தும் மேன்மைப்படுகிறோம். ஆனால் வேதம் கூறுகிறது, நாம் மேன்மை பாராட்டுவதற்கென்று ஒன்று உண்டென்றால் அது கர்த்தராகிய இயேசுவை நாம் அறிந்து, உணர்ந்திருப்பதைக் குறித்து மட்டும் மேன்மைப் பாராட்டவேண்டும். இயேசு என்னும் அவருடைய நாமத்தைக் குறித்து மாத்திரம் மேன்மைப் பாராட்டவேண்டும். சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் (சங்கீதம் 20:7-8). உலகத்தின் பல காரியங்களைக் குறித்து மேன்மை பாராட்டினவர்கள் எல்லாரும் முறிந்து விழுந்தார்கள். ஆனால் இயேசுவைக் குறித்தும் அவருடைய சிலுவையைக் குறித்தும் மேன்மை பாராட்டினவர்களை கர்த்தர் எழுந்து நிமிர்ந்து நிற்கப்பண்ணுகிறார்; தொடர்ந்து ஓடும்படி செய்கிறார்.
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம். அகித்தோப்பேல் என்று ஒரு மனுஷன் காணப்பட்டான், அவனுடைய வாக்கு தேவனுடைய வாக்கு போல ஞானத்தினால் நிறைந்ததாய் காணப்பட்டது. ராஜாக்கள் அவனுடைய ஆலோசனையைக் கேட்டார்கள். ஆனால், தேவன் அவனுடைய ஞானத்தை அபத்தமாக்கிப்போட்டார். டைட்டானிக் கப்பலை வெள்ளோட்டம் விட்ட வேளையில் சொன்னார்களாம், தேவனால் கூட இதை மூழ்கடிக்கமுடியாது என்று. காரணம் மனுஷ ஞானத்தின் மேன்மையாய் அந்த கப்பல் காணப்பட்டது. ஆனால் 1912-ம் வருடம் ஏப்ரல் மாதம் 15-ம் தியதியில் ஒரு சிறிய பனிக்குவியலின் நிமித்தம் மூழ்கிப்போனது. ஆகையால் உங்கள் ஞானம் திறமைகளைக் குறித்து ஒருபோதும் மேன்மை பாராட்டாதிருங்கள். ஆண்டவரைச் சார்ந்திருங்கள்.
பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம்; எனக்கு நல்ல ஆரோக்கியம் காணப்படுகிறது, பலசாலி என்றெல்லாம் மேன்மை பாராட்டாதிருங்கள். கோலியாத் 9 அடிக்கு மேலாக காணப்பட்டவன், பெரிய வீரன். இஸ்ரவேல் சேனையை நடுங்கப்பண்ணினவன். என்னோடு யார்தான் யுத்தம் செய்யமுடியும் என்று சவால் விட்டவன். ஆனால் தாவீதின் ஒரு கூழாங்கல்லுக்கு முன்பாக நிற்க முடியவில்லை, மடிந்துபோனான். சிறிய ஒருவியாதிக்கு முன்பாக மனுஷனால் நிற்கமுடியாது. இயேசுவே நம்முடைய ஆரோக்கியமாய், பலமாய் காணட்டும்.
ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம். ஐசுவரியம் நிலையற்றது. பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஐசுவரிய சம்பன்னன். ஒருநாள் தன் பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். அப்படியே நடந்தது. பூமியின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் பூச்சியும் துருவும் கெடுக்கும். ஆகையால் ஒருபோதும் ஆஸ்தி; ஐசுவரியங்கள்; செல்வங்களைக் குறித்து மேன்மை பாராட்டாதிருங்கள்.
நம்முடைய தேவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர். தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிற கர்த்தர். அவர் ஒருவரே நியாயமும் நீதியும் செய்கிறவர். உலகம் முழுவதும் அநியாயமும் அநீதியும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் கர்த்தர் நியாயமும் நீதியும் செய்கிறவர். அவரை அறிந்திருக்கிறோமா? தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார் (சங். 14:2,சங். 53:2). உணர்வு பூர்வமாய் கர்த்தரை தேடுகிறோமா? இவற்றைக் குறித்து மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar