தன்னலமும் பிறர்நலமும் (Selfishness and wellbeing of others)

தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால்  அறிந்துகொண்டேன் (தானி. 9:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KEBJVVp5fOk

சிலர் எப்பொழுதும் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டு காணப்படுவார்கள். அவர்களுடைய நலன் மற்றும் எதிர்காலம்   மட்டுமே அவர்களுக்கு முக்கியமாகத் தெரியும். மற்றவர்களைக் குறித்தும், தேவனுடைய காரியங்களைக் குறித்தும் கரிசனையற்றவர்களாய் காணப்படுவார்கள். வேறுசிலர் ஜனங்களைப் பற்றியும், தேசங்களைப் பற்றியும் சிந்திக்கிறவர்களாய் காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களில் தானியேலும்  ஒருவனாய் காணப்பட்டான். தானியேல் தன்னைக்குறித்து எண்ணுவதைப் பார்க்கிலும் தன்னுடைய தேசத்தின் ஜனங்களுடைய நலன்களைக் குறித்து அதிகமாய் எண்ணினான்.  யூதாவின் ஜனங்களுடைய பாவம் அவர்களைப் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குள் கொண்டுவந்தது.  துன்மார்க்கர்களோடு சில நல்லவர்களும் அடிமைகளாய் சிறை பிடிக்கப்பட்டார்கள். அவர்களில் தானியேலும் ஒருவனாய் காணப்பட்டான். அவன் உண்மையுள்ளவனாகவும் ஜெபிக்கிறவனாயும் காணப்பட்டதினாலும், ராஜாவின் போஜனத்தாலும், பானத்தினாலும் தன்னைத்  தீட்டுப்படுத்துவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தை எடுத்ததின் நிமித்தமும்  கர்த்தர் அவனை உயர்த்தினார். அவன்   பாபிலோனிய ராஜாக்களான நேபுகாத்நேச்சார், ஏவில் மெரொதாக்,  பெல்ஷாத்சார், மேதியனாகிய தரியு, மற்றும் பெர்சியனாகிய கோரேஸ் என்ற ஐந்து ராஜாக்களை அவன் சேவித்தான். ஐந்துபேருடைய நாட்களிலும் தானியேல் ராஜாவின் அடுத்த ஸ்தானத்தில் காணப்பட்டான். அவன் மிக உயர்ந்த பதவியில் காணப்பட்டாலும், தன்னுடைய ஜனங்களைக் குறித்துச் சிந்திக்கிறவனாய் காணப்பட்டான். அவர்களுடைய சிறையிருப்பின் நாட்கள் எப்பொழுது முடியும் என்பதை அறிய புஸ்தகங்களை வாசிக்கிறவனாய் காணப்பட்டான். அப்போது அவன் எரேமியா 29:10ல் எழுதப்பட்ட எழுபது வருஷத்தைப் பற்றியும், அதன்பின்பு கர்த்தர் அவர்களைச் சந்தித்து எருசலேமிற்குத் திரும்பி வரப்பண்ணுவார் என்ற நல்வார்த்தையையும், கர்த்தர் அவர்கள் மேல் கொண்ட நினைவுகள் நன்மைக்கேதுவானவைகள் என்பதையும்  அவன் அறிந்து கொள்ளுகிறான். அவ்வண்ணமாகவே கர்த்தர் யூதாவின்  ஜனங்களுக்குச் செய்தார்.

பிலிப். 2:4,5 கூறுகிறது, அவனவன் தனக்கானவை களையல்ல,  பிறருக்கானவை களையும் நோக்குவானாக,  கிறிஸ்து இயேசுவிலிருந்த அதே சிந்தை உங்களிலும் இருக்கக்கடவது என்பதாக. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் மற்றவர்களைக் குறித்த கரிசனை உடையவர்களாகவும் காணப்படவேண்டும். ஆத்துமாக்களைக் குறித்தும், தேவ ராஜ்யத்தின் தேவைகளைக் குறித்தும்  சிந்தையுடையவர்களாய் நாம் காணப்பட வேண்டும். பலவிதமான அடிமைத்தன நுகத்தடியின் கீழ் காணப்படுகிற ஜனங்களை எப்படியாகினும் விடுதலையாக்குவதற்கு  பிரயாசப்படுகிறவர்களாய் நீங்கள் காணப்பட வேண்டும். நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சியுங்கள் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யும் போது, தானியேலின் காரியங்கள் ஜெயமாயிருந்தது போல, உங்கள் காரியங்களும் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *