ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்.

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள் (வெளி. 21:27).

புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை நம்முடைய அருமை ஆண்டவர் அவருடைய மணவாட்டியாகிய நமக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைப் பிதாவின் வீடு என்று யோவான் 14:2-ல் வேதம் குறிப்பிடுகிறது. அங்கே கண்ணீர் இல்லை, மரணமில்லை, துக்கமில்லை, அலறுதலில்லை, வருத்தமுமில்லை. புதிய எருசலேம் என்ற நகரம் சதுரமான அமைப்பை உடையது. அது ஆயிரத்து ஐந்நூரு மைல் அகலமும்,  ஆயிரத்து ஐந்நூரு மைல் நீளமும், ஆயிரத்து ஐந்நூரு மைல் உயரமும் உள்ள நகரம். அதின் நீளமும் அகலமும் உயரமும் சமம்.  ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் புதிய எருசலேமில் பிரவேசிப்பார்கள். பெயர் எழுதப்படவில்லையென்றால் பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்ட அக்கினி கடலிலே தள்ளப்படுவார்கள். ஆகையால், பெயரெழுதப்படுவதும், எழுதப்படாததும் பரலோகத்திற்கும் பாதாளத்திற்கும் உள்ள வித்தியாசமாய் காணப்படுகிறது. . ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் (வெளி. 20:15).

உலகத்தில் அனேக இடங்களில் நம்முடைய பெயர்கள் காணப்படவேண்டும் என்று பிரயாசப்படுகிறோம். சிறிய பொருட்கள் ஆலயத்தில் வாங்கிக்கொடுத்தால் கூட அதில் நம்முடைய பெயர்கள் பொறிக்கப்படபடவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஜீவ புஸ்தகத்தில் பெயர்கள் எழுதப்பட பிரயாசப்படுகிறோமா? ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் பாவங்களற கழுவப்படவேண்டும். அதற்காகவே தன்னை பஸ்கா ஆட்டுக்குட்டியாக கல்வாரி சிலுவையில் அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பில்லை. நாம் பாவத்திலிருந்து மீட்கப்படும் படிக்கு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். சிலுவையண்டை வந்துவிடுங்கள். சிலுவை நாதரின் இரத்தத்தால் கழுவப்பட்டால் பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கர்த்தர் கொடுக்கிறார். கர்த்தர் எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். இயேசு சொன்னார், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். ஆம், நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்படுவது தான் மெய்யான சந்தோஷமாய் காணப்படுகிறது.

எழுதப்பட்ட நாமங்கள் கிறுக்கப்படவும் செய்யலாம் என்று வேதம் எச்சரிக்கிறது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, செங்கடல் வழியாக ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்த வேளையில், ஆண்டவர் அவர்களை அழித்துப் போட, அவர்கள் நாமங்களைக் கிறுக்கிப்போட சித்தம் கொண்டார். அந்த வேளையில், மோசே, தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்று பரிந்து பேசினான். எழுதப்பட்ட நாமங்கள், பாவ ஜீவியத்தை தொடந்து செய்தால், கிறுக்கப்படவும் கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகையால் கிறுக்கப்படாமல் இருப்பதற்கு ஜெயங்கொள்ளுகிற ஜீவியம் செய்யவேண்டும். . ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன் (வெளி. 3:5).

சுவிஷேச காரியங்களில் நாம் பிரயாசப்படும்போது, கர்த்தருடைய ஊழியத்தை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்யும் போதும், ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட நம்முடைய நாமங்கள் தொடர்ந்து காணப்படும். அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது (பிலி. 4:3). ஆகையால், உற்சாகமாய் கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் அன்பின் பிரயாசத்தைக் கர்த்தர் மறந்து போவதில்லை. கர்த்தருடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளுவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் உண்மையாய் உங்களை அர்பணியுங்கள். ஒன்றையும் குறைத்துப்போடாமல் பிரசங்கியுங்கள். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார் (வெளி. 22:19).  ஆகையால் தேவனுடைய சகல ஆலோசனைகளையும் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுவதையும் தொடர்ந்து காணப்படுவதையும் உறுதிசெய்து, புதிய எருசலேமை சுதந்தரியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Thirakkapatta Oru Ootru, Uthamiyae Vol. 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *