சுவிசேஷத்தை அறிவியுங்கள்:-

கொலோசெயர் 1 : 23. அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

வானத்தின் கீழிருக்கும் சகல சிருஷ்டி என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் முழு உலகமும் அதாவது அது எந்த தேசமாக, எந்த மாநிலமாக, எந்த பட்டணமாக இருந்தாலும் சரி எல்லா இடத்திலும் சுவிசேஷம் பிரசங்கிக்கபட வேண்டும். இன்றைய நாட்களில் பலர் வெறும் பட்டணத்தை தேடியும், வேறு சில உயர்ந்த அல்லது வளர்ந்த நாடுகளுக்கு மாத்திரம் சுவிசேஷம் அறிவிக்க கடந்துசெல்லுகிறார்கள். கிருஸ்தவர்களுக்கே சுவிசேஷம் சொல்லுகிறோம். ஆனால், கிராமங்கள், சிறு பஞ்சாயத்துகள், பழங்குடி வாழ் மக்கள் வாழும் இடங்களை அதிகமாக கவனத்தில் கொள்வதில்லை. வசனம் சொல்கிறது வானத்தின் கீழெங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.

சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். அப்படியென்றால், புறஜாதி, கிறிஸ்துவர்கள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வித்தியாசமில்லை. எல்லாருக்கும் சுவிசேஷம் கடந்து செல்ல வேண்டும். மத்தேயு 24:14ல் ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் என்று ஆண்டவர் சொல்லியிருப்பதை பாருங்கள்.பலருக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க பயம் அல்லது கூச்சம். ஒரு பேருந்துநிலையத்தில் நாம் செல்ல வேண்டிய பேருந்து எங்கே இருக்கிறது என்று கேட்பதற்கு நம்மில் அநேகருக்கு பயமில்லை, கூச்சமில்லை. ஆனால் அதே தெரியாத நபர்களிடம் உங்களுக்காக இயேசு மரித்தார், உங்களுக்காக இயேசு உயிர்த்தெழுந்தார் என்று சொல்வதற்கு பயம், கூச்சம் என்று அமிழ்ந்து போய்விடுகிறோம். இந்த நவீன காலத்தில் நமக்கு அணைத்து வசதிகள் இருந்தும் சோம்பலாகிவிடுகிறோம், கஷ்டம் என்று கருதுகிறோம், பல வேலை இருக்கிறது என்று காரணம் சொல்கிறோம். இன்று ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு செல்ல ஒரு சில மணிநேரங்களில் விமானத்தில் போய்விடுகிறோம். ஆனால் உலகம் நவீனமயமாக்கப்படுவதற்கு முன்பாக தேவ மனிதர்கள் பல மாதங்கள் இல்லை வருடங்களாக பயணித்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். கால் நடையாக நாடு விட்டு நாடு சென்று, பாலைவனத்தில் தண்ணீர் கூட இல்லாமல், அடிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, குத்தப்பட்டு, துன்பப்பட்டு, குடும்பங்கள் சொந்த பந்தங்களை விட்டு, மழையால் பனியால் வெயிலால் கஷ்டப்பட்டு இந்த சுவிசேஷத்தை அறிவித்தார்கள். பல மாதங்கள் கப்பற் பயணத்திலேயே தாங்கள் செல்லும் நாட்டின் மொழிகளை கற்றறிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள். இன்று நாம் சொல்லும் பல அற்ப காரணங்கள் வீட்டில் திட்டுவார்கள், தலைவலி, முழங்கால் வலி, வேலை பளு என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்கு பங்கில்லாதவர்களாக நம் வாழ்வை முடிக்கிறோம்.

சற்று கண்களை ஏறெடுத்து பாருங்கள்; அறுவடை மிகுதியாய், வயல் நிலங்கள் ஆயத்தமாயிருக்கிறது. ரட்சிக்கப்படாத கோடிக்கணக்கான ஜனங்கள், நரகத்திற்கு செல்லும் ஜனங்கள், கிறிஸ்துவை அறியாத பட்டணங்கள், கிராமங்கள், கிருஸ்த்துவை புறம்பே தள்ளுகிற கோடிக்கணக்கான ஜனங்கள் இந்நாட்களில் இருக்கிறார்கள். இன்று இதற்காக வேலை செய்ய வேலையாட்கள் அதிகமாக தேவை படுகிறது. நீங்கள் இயேசுவை பற்றி சொல்லும் ஒரு வார்த்தையினிமித்தமாக அந்த சந்ததி ரட்சிக்கப்படுமே. சுவிசேஷம் சொல்லுவது நம் மீது விழுந்த கடமை என்பதை மறந்துபோய்விடாதீர்கள்.

ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Bro.Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *