வெறும் மண் (Just Dust)

சங் 103:14. நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xGJCCMzcohU

ஆண்டவர் மனிதனை மண்ணென்றே நினைவுகூருகிறார். நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்று தங்கள் மார்பை தட்டிக்கொள்பவர்கள், அரண்மனையில் வசிக்கும் நபர்கள், பண்ணை வீட்டில் வாழ்பவர்கள், கிராமத்தில் வாழ்பவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் வேலையாட்கள் என்று யாராக இருந்தாலும் அனைத்து மனிதர்களையும் கர்த்தர் மண்ணென்று நினைவுகூருகிறார். காரணம் தேவன் மனிதனை மண்ணினால் உண்டாக்கினார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபிறகு ஆண்டவர் கொடுத்த தீர்ப்பு என்னவென்றால், ஆதி 3:19ல் சொல்லுகிறார், நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். மனிதன் மண்ணினால் உண்டானான்; திரும்ப மண்ணிற்கே செல்லுகிறான். ஆகையால் இந்த உலகத்தில் வாழும்போது நமக்குள்ளாக சுயநலமும் பெருமையும் மேலோங்க அனுமதிக்க கூடாது.

பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய பரிசுத்தவான், விசுவாசிகளின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், விசுவாசத்தில் வல்லவனாக திகழ்ந்தவர், பூமிகொள்ளாத அளவிற்கு செல்வத்தை கொண்ட ஆபிரகாம் என்ன சொல்லுகிறார் தெரியுமா? ஆதி 18:27ல் அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன் என்பதாக. தன்னை தூளுக்கு ஒப்பாக சொல்லுகிறதை பாருங்கள். சற்று யோசித்துப்பாருங்கள் ஆபிரகாமே தன்னை தூள் என்று சொல்லி இருப்பாரென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்று!

புதிய ஏற்பாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய அப்போஸ்தலன், அநேக சபைகளை நிறுவியவன், அநேக அற்புதங்களை செய்தவன், வேதாகமத்தில் அநேக புஸ்தகங்களை / நிருபங்களை எழுதிய பரிசுத்தவான் பவுல் என்ன சொல்லுகிறான் தெரியுமா? 1 கொரி 4:13ல் இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம் என்று சொல்லுகிறான். தன்னை சாதாரண குப்பைக்கு ஒப்பாக சொல்லுகிறான். சற்று யோசித்து பாருங்கள் இவ்வளவு பெரிய அப்போஸ்தலனே தன்னை குப்பை என்று சொல்லி இருப்பானென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்று !

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் மத்தியில் வந்தவனும், இயேசுவிற்கு வழியை ஆயத்தம் பண்ணும்படி வந்தவனும், இவனுக்கொத்த தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை என்று இயேசுவால் சாட்சி சொல்லப்பட்டவனுமாகிய யோவான் ஸ்நானன் என்ன சொல்லுகிறான்? மத் 3:11ல் மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்பதாக. இயேசுவின் தூசிபடிந்த காலணிகளை சுமக்க கூட தான் அறுகதையற்றவன் என்று யோவான் ஸ்நானகன் சொல்லுகிறான். இவ்வளவு பெரிய தீர்க்கதரிசியே தன்னை, தூசிபடிந்த காலணிகளை சுமக்க தகுதியற்றவன் என்று சொல்லி இருப்பானென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்று யோசித்துப்பாருங்கள்.

ஆகையால் ஒன்றுக்கும் உதவாத மனிதர்களை நமக்கு முன்மாதிரியாக கொள்ளவேண்டாம். ஆபிரகாம், பவுல், யோவான் ஸ்நானன் போன்ற முன்னோடிகள் தான் நம்முடைய முன்மாதிரிகளாய் காணப்படட்டும். தாழ்மையின் சுபாவத்தோடு நாம் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *