நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். லூக்கா 1:79.
சகரியா என்னும் ஆசாரியன், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்த ஆவியினால் நிறைந்து பிறக்கப்போகிற இயேசுவுக்குப் போட்ட பெயர் உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் என்பதாய் காணப்படுகிறது. அருணோதயம் (Day Spring) என்பது சூரிய உதயத்தை, ஒருநாளின் துவக்கத்தைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனுகுலத்திற்கு ஒரு புதிய துவக்கத்தைக் கொடுத்தது. வரலாற்றிலும் கிறிஸ்துவுக்கு முன்பு, கிறிஸ்துவுக்குப் பின்பு என்று ஒரு புதிய துவக்கத்தை இயேசுவின் பிறப்புக் கொடுத்தது. இயேசு நம்முடைய இருதயத்தில் பிறக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் ஒரு புதிய துவக்கம் ஆரம்பிக்கிறது. அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நம்முடைய வாழ்க்கையே மாறுகிறது. முந்தினவைகள் எல்லாம் ஒழிந்து, எல்லாம் புதிதாய் மாறுகிறது.
உன்னதத்தின் அருணோதயமாக இயேசு தோன்ற வேண்டிய காரணம் என்ன? இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறவேண்டும் (மத். 4:15,16). இஸ்ரவேல் ஜனங்கள் ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுதலையாக்க மேசியா பிறக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காணப்பட்டார்கள். அவர்களைப் பகைக்கிறவர்கள் கைகளிலிருந்து ரட்சிக்கும் படிக்கு மேசியாவின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். ஆனால் இயேசு ஒரு தச்சனுடைய குமாரனாக, எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட நாசரேத்தூரில், மாளிகையில் அல்ல மாட்டுக்கொட்டகையில் பிறந்தபோது, இயேசுவை மேசியாவாக யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய வெளிச்சத்தைப் புறக்கணித்தார்கள். இருளின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதையே தெரிந்துகொண்டார்கள்.
ஆகையால், உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமாகிய அந்த ஒளி புறஜாதிகளாகிய நம்மைச் சந்தித்தது. எவ்வளவு பெரிய பாக்கியம். இயேசுவுக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி என்று யோவான் 1:4,5,8-ல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஒளி இருளின் ஆதிக்கத்திலிருந்த நம்மை விடுவித்தது. அந்தகாரலோகாதிபதியின் ஆளுகையிலிருந்து நம்மை முழுவதும் விடுவித்தது.
உன்னதத்திலிருந்து உதித்த அருணோதயமாகிய ஒளி நம்மை சந்தித்ததின் நோக்கம் என்ன? நீங்கள் உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கவேண்டும். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத்தேயு 5:14). சூரியனிடத்திலிருந்து வெளிச்சத்தைப் பெற்று சந்திரன் பிரகாசிப்பது போது, இயேசுவாகிய ஒளியினிடத்திலிருந்து வெளிச்சத்தைப் பெற்று நாம் சுடர்களாக பிரகாசிக்கவேண்டும். அதற்காய் தான் இயேசு நம்மைத் தெரிந்துகொண்டார், மீட்டெடுத்தார், இரட்சித்தார் என்பதை கர்த்தருடைய ஜனம் உணர்ந்தவர்களாகக் காணப்படவேண்டும். யோவான் ஸ்நானகன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் காணப்பட்டான், அவனுடைய வெளிச்சத்தில் நடக்க அனேகர் மனதாயிருந்தது போல, நம்முடைய வெளிச்சத்திலும் அனேகர் நடக்கவேண்டும். கர்த்தருக்காக வெளிச்சம் வீசுகிற பாத்திரங்களாக நாம் காணப்படுகிறோமா? இயேசுவாகிய வெளிச்சத்தை நம்மிடத்தில் கண்டு ஜனங்கள் கர்த்தரண்டை வருகிறார்களா? பண்டிகை காலங்களில் காணப்படுகிற நாம், உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்ததன் நோக்கத்தை அறிந்து வாழ்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar