என் பரிசுத்தப் பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடுசெய்வாருமில்லை, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏசா. 11:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HbjXQP0gUrQ
கிறிஸ்துவின் இரகசிய வருகையில், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும், அவருக்குள் உயிரோடிருக்கிறவர்களும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இந்தப் பூமியானது கேட்டின் மகனாகிய அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் ஏழு வருடங்கள் ஒப்புக்கொடுக்கப்படும். ஏழு வருடங்களின் முடிவில், வெளி. 19:12-14ம் வசனங்களின்படி, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார், அவருடைய கண்கள் அக்கினிஜீவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேகக் கிரீடங்கள் இருந்தன, அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது, இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார் அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே என்று எழுதியிருக்கிறபடி இயேசு வெள்ளைக்குதிரையின் மேல் ஏறி, தீமையை இப்பூமியிலிருந்து அகற்றி நீதியை நாட்டுவதற்காக, அர்மகெதோன் யுத்தத்திற்காக வருவார். இயேசுவோடு கூட யுத்தத்திற்கு, இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களகிய நாமும் வருவோம்.
அர்மகெதோன் என்ற வார்த்தையானது வேதத்தில் ஒரே ஒரு முறைதான் எழுதப்பட்டிருக்கிறது. வெளி. 16:16ல், அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான் என்பதாக சத்துருவைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அர்மகெதோன் யுத்தத்தில் அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டு கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்படுவார்கள். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை ஒரு தூதன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதன்மேல் முத்திரைபோடுவான். அதன் பின்பு, இயேசு இந்த பூமியில், எருசலேமை மையப்படுத்தி, ஆயிரம் வருடம் ஆட்சி செய்வார்.
இயேசுவின் ஆயிர வருட அரசாட்சியில், நீதியும், நியாயமும், சத்தியமும், உண்மையும் எங்கும் காணப்படும். இந்நாட்களில் எங்குப் பார்த்தாலும் அநியாயமும், அக்கிரமும், கொலைகளும், கொள்ளைகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பரவிக் காணப்படுகிறது. கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் என்று 2 தீமோ. 3:1-5ல் எழுதப்பட்டதின்படி ஜனங்கள் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். இவைகள் யாவும் இயேசுவின் வருகைக்கு அடையாளமாகக் காணப்படுகிறது. ஆனால் இயேசு ராஜாவின் ஆயிர வருட அரசாட்சியில் ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும், கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும், ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான், பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும், சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும், பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்தப் பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, கேடுசெய்வாருமில்லை என்று வேதம் கூறுகிறது. சமாதானப்பிரபு ஆட்சி செய்யும் போது, சமாதானம் எங்கும் நிறைவாகக் காணப்படும். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளே அநீதியைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். நீதியும் நியாயமும் புரட்டப்படும் போது மனமடிவாகாதிருங்கள். இயேசுவின் அரசாட்சி துரிதமாய் மலரப்போகிறது. அப்போது அவரோடு சேர்ந்து நீங்களும் ஆளுகைச் செய்யப் போகிறீர்கள். அவருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஏற்ற உத்தமமான ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்படுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

