வித்தியாசத்தைப் போதியுங்கள் (Teach the difference)

அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததிற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப்போதித்து, அவர்களுக்குத்  தெரியப்பண்ணக்கடவர்கள் (எசே. 44:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CtnJRlxEQyw

ஊழியக்காரர்களுடைய பிரதானமான பணிகளில் ஒன்று ஜனங்களுக்கு வித்தியாசத்தைக் கற்றுக் கொடுப்பதாகும். நீதிக்கும் அநீதிக்கும், பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும், பக்திக்கும் அவபக்திக்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தைப்  போதிக்க வேண்டும். நியாயப் பிரமாணத்தின் படி கர்த்தர் பிரதான ஆசாரியனாகிய  ஆரோனுக்கு கொடுத்த கட்டளையும்  இதுவாய்க் காணப்படுகிறது, நீ பரிசுத்தமுள்ளதற்கும்  பரிசுத்தமில்லாததிற்கும், தீட்டுள்ளதற்கும்  தீட்டில்லாததற்கும்,  வித்தியாசம்பண்ணும்படிக்கும் அவர்களுக்குப் போதிக்கவேண்டும் என்பதாக லேவி. 10:10,11ல் எழுதப்பட்டிருக்கிறது. 

தேவன் துவக்கத்திலிருந்து இரண்டு வழிகளை நமக்கு முன்பாக வைத்தார். ஏதேனில் ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் வைத்தார். எரேமியா தீர்க்கன் மூலம்,   இதோ,  ஜீவவழியையும் மரணவழியையும் உங்களுக்கு முன்பு வைக்கிறேன் என்று கூறினார்.  ஜீவனுக்குப் போகிற வழியையும், கேட்டுக்கு போகிற வழியையும் குறித்து இயேசுவும் மலைப்பிரசங்கத்தில் போதித்தார். ஒன்று நம்மைப் பரலோகத்தில் கொண்டு சேர்க்கும், இன்னொன்று பாதாளத்திற்கு நேராக இழுத்துச் செல்லும். இயேசு நம்மை அவருடைய சாயலில், அதாவது சுயமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில்   சிருஷ்டித்திருக்கிறார். ஆகையால் நாம் இரண்டிற்கும் காணப்படுகிற வித்தியாசத்தை உணர்ந்து சரியான வழியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எரே. 6:16 கூறுகிறது.

இந்நாட்களில் காணப்படுகிற ஊழியர்களைக் குறித்து கர்த்தர் தீர்க்கதரிசனமாகக் கூறும் போது, என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததிற்கும் வித்தியாசம் பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக்  காண்பியாமலும் இருந்து, என் ஓய்வு நாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள் அவர்கள் நடுவிலே நான்  கனஈனம்பண்ணப்படுகிறேன் என்று எசே. 22:26ல் கர்த்தர் வேதனையோடு கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. ஜனங்களைப் பிரியப்படுத்தியும், திருப்திப்படுத்தியும், இழிவான ஆதாயத்தை இச்சித்தும்,   அவர்களுடைய நாடித்துடிப்பை நன்கறிந்து, அதற்கேற்ற  வார்த்தைகளைப் பேசுகிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டது.   நீங்கள் தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பீர்கள் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ஊழியர்கள் நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போதித்து கர்த்தருடைய வாயாயிருங்கள், விசுவாசிகளும் ஜீவனுக்குரிய,  நன்மையான வழியைதைத் தெரிந்தெடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *