யோவா 12:26. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mL6SgB5uoB4
இயேசு ஊழியம் கொள்ள வரவில்லை; ஊழியம் செய்ய வந்தார். சீஷர்கள் தன்னுடைய கால்களை எப்படி கழுவ வேண்டும் என்று போதிக்கவில்லை. மாறாக, இயேசு சீஷர்களின் கால்களை கழுவி தாழ்மையை கற்றுக்கொடுத்தார். கர்த்தருடைய ஊழியம் என்பது கட்டாயமான சேவையல்ல; மனவிருப்பமான சேவை. ஒரு ஊழியக்காரர் சொன்னார் தேவனுடைய ஊழியம் என்பது சுமையல்ல; அது சுகம் என்று கூறினார். கர்த்தருடைய ஊழியம் என்பது நம்முடைய வாழ்வில் எல்லாரும் அனுபவிக்கவேண்டிய சுகமாய் இருக்க வேண்டும்.
ஒரு புறம் கர்த்தருடைய ஊழியத்தை செய்தால் கனம் கிடைக்கும். மறுபுறம், கர்த்தருடைய ஊழியத்தை அசதியாய் செய்தால் சாபம் வரும் என்றும் வேதம் எச்சரிக்கிறது. சிறிதானதோ பெரிதானதோ கர்த்தருடைய ஊழியத்தை அசதியாய் செய்ய கூடாது. இழிவான ஆதாயத்திற்க்காக கர்த்தருடைய ஊழியத்தை செய்யக்கூடாது; உற்சாகமான சேவையாக கர்த்தருடைய ஊழியத்தை செய்ய வேண்டும். சுயலாபத்திற்காக கர்த்தருடைய ஊழியத்தை செய்யக்கூடாது. மக்களுடைய பாராட்டுகளை பெற வேண்டும் என்றும் ஊழியம் செய்ய கூடாது. மக்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்து ஊழியம் செய்ய கூடாது. ஊழியம் செய்பவர்கள் தற்புகழ்ச்சியை நாடுகிறவர்களாய் காணப்படக்கூடாது. பண காரியங்களிலும் பொருட்களை கையாளுவதில் நேர்மைத்தன்மை காணப்படவேண்டும். மந்தைக்கு மாதிரியாக இல்லாமல், மந்தைகள் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் உண்மையான ஊழியக்காரர்கள் அல்ல. இவ்வைகையான போர்வையை தரித்து கொண்டுவரும் நரிகளை கர்த்தருடைய பிள்ளைகள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார் என்று மத் 9:36 வது வசனம் கூறுகிறது.
இந்த உலகத்தில் கனமான வேலைகள் என்று பலர் பல வேலைகளை சொல்லுவார்கள். கலெக்டர் வேலை தான் பெரிய வேலை என்று சொல்லுவார்கள், சிலர் மருத்துவர் வேலை தான் பெரிய வேலை என்று சொல்லுவார்கள், சிலர் பொறியியல் வேலை தான் பெரிய வேலை என்று சொல்லுவார்கள், சிலர் ஆசிரியர் வேலை தான் பெரிய வேலை என்று சொல்லுவார்கள். நெகேமியாவிடம் எந்த வேலை பெரிய வேலை என்று கேட்டால், அவன் சொல்லுவது கர்த்தருடைய வேலை தான் பெரிய வேலை என்று சொல்லுவான். இடிந்துபோன அலங்கத்தை எடுத்து கட்டுவது தான் அவனுடைய பெரிய வேலையாக இருந்தது. அந்த வேலை தான் இந்த உலகத்தில் கிடைக்கும் கனத்தை காட்டிலும் பெரிய கனம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவும், யார் கனப்படுத்திகிறார் என்று பார்த்தால், வானத்தையும் பூமியையும் சர்வலோகத்தையும் சிருஷ்டித்த பிதாவானவர் கனப்படுத்துகிறார் என்று வசனம் கூறுகிறது. ஊழியத்தை சரியாக செய்யாமல் ஏனோ தானோ என்று செய்தால் வருகிற சாபத்திற்கு அளவில்லை. அதே ஊழியத்தை உண்மையாய் உத்தமமாய் செய்தால் வரும் கனத்திற்கு ஒப்பான வேறொரு கனம் இல்லை. அப்படிப்பட்ட கனத்தை பெற்றுக்கொள்ள உண்மையாய் கர்த்தருடைய ஊழியத்தை செய்யுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

