யோவா 14:30. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/R6Js8hwJu7E
இயேசு நாற்பது நாட்கள் ஒன்றும் புசியாமல் உபவாசம் இருந்தார். இயேசு உபவாசம் இருந்து முடித்தபிறகு சாத்தான் அவரை சோதித்தான். ஆகையால் உபவாசம் இருந்தபிறகு சத்துரு சோதிக்கமாட்டான் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. இயேசுவிடம் சாத்தான் என்னை பணிந்துகொண்டால், காண்கிற அனைத்திற்கும் உன்னை அதிகாரியாக்குவேன் என்று பேரம் பேசிக்கொண்டு அதாவது Bargain பண்ணிக்கொண்டு இருந்தான். ஒரு கடையில் பொருளை வாங்கும்போது சிலர் Bargain செய்து இல்லையென்றால் Negotiate செய்து வாங்குவார்கள். அதுபோல சாத்தான் இயேசுவிடம் பேச்சுவார்த்தை அதாவது Negotiate செய்து கொண்டிருந்தான். இயேசு அவனுடைய முன்மொழிவிற்கு, முடியாது என்றும் மாட்டேன் என்றும் தீர்க்கமாக சொன்னார். இயேசு பிசாசுக்கு மாட்டேன் என்று மார்தட்டி சொன்னதால் தான், இயேசு சொன்னார் இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் கடன் பாக்கியை பெற்றுக்கொள்ளுவதற்கு ஒன்றுமில்லை என்பதாக. பிசாசு உலகத்தின் அதிபதி. அதை தான் 2 கொரி 4:4 கூறுகிறது, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்பதாக.
எப்பொழுதும் பிசாசு கொண்டுவரும் இச்சைகளுக்கும், நயவஞ்சகத்துக்கும், மாய்மாலமான அன்பிற்கும், பொருளாசைக்கும் மாட்டேன் என்று சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும். விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் என்று யாக் 4:4 கூறுகிறது. உலக சிநேகத்திற்கு தலையசைத்துவிட்டு, இயேசுவுக்கு மாட்டேன் என்று சொல்லும் நபர்களாக கர்த்தருடைய பிள்ளைகள் காணப்படக்கூடாது.
சில சந்தர்ப்பங்களில் சத்துரு பொருளாசையை கொண்டுவருவான். பொருளாசை பாவம் என்பதையறிந்து, அதற்கு தலையசைக்காமல், மாட்டேன் என்று மார்தட்ட வேண்டும். சிற்றின்பத்திற்கு எத்தனைமுறை சாத்தானுக்கு தலையசைத்துவிட்டு, நமது பரம எதிரியாகிய பிசாசுக்கு நண்பனாகிவிட்டோம் என்று கணக்குப்போட்டு பாருங்கள். பரம எதிரியிடம் போய் தலையசைத்து, கைகொடுத்து, அவன் தோள் மேல் கரங்களை போட்டு, அவனுக்கு நண்பனாக மாறிவிடவா இயேசு உங்களை அழைத்து வேறுபிரித்தார்? யோசேப்பை கவனித்து பாருங்கள். விபச்சாரம், பிறனுடைய மனைவியை இச்சிப்பது போன்ற பாவங்கள் அவனுடைய வாசலில் படுத்துக்கிடந்தபோது, அதற்கு மாட்டேன் என்று மார்தட்டி, அந்த பாவங்களை மிதித்து, ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுங்கள். யோசேப்பின் இந்த செயலை பார்த்து எவ்வளவாய் பிதாவானவர் மகிழ்ந்திருப்பார் என்பதை கற்பனை செய்துபாருங்கள். யோசேப்பை போல, இயேசுவை போல சாத்தானுக்கு BIG NO சொல்லுங்கள். அப்பொழுது உலகத்தின் அதிபதிக்கு உங்களிடத்தில் பெற்றுக்கொள்ளும் கடன் பாக்கி ஒன்றும் இருக்காது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

