கொலோசெயர் 3 : 1,2. நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NHFYsAH6CGA
மேலானவைகளைத் தேடுங்கள், மேலானவைகளையே நாடுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதை பார்க்கிறோம். அதாவது குறிப்பாக சபைக்கு, நமக்கு ஆவியானவர் சொல்லுகிற ஒரு மேலான காரியம் பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளை, பரலோக ராஜ்யத்துக்குரியவைகளை, கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ளவைகளை நாடுங்கள் என்பதாக. மேலானவைகளை நாடுங்கள் என்று எழுதப்படவில்லை. மேலானவைகளையே நாடுங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது இதை தவிர நமக்கு வேறொரு திட்டம், இல்லையென்றால் விருப்பம் இல்லை என்று அர்த்தம். இந்த இடத்திற்கு ஒப்பான வேறொரு இடம் எங்கேயும் நம்மால் கண்டு பிடிக்கமுடியாது.
நம்மில் அனேகரிடம் இந்த உலகத்துக்குரிய மேலான இடம் என்ன என்று கேட்டால், வேலையில் அடுத்த உயர்வு, ஏதாவது சங்கத்தில் தலைவர் பதவி, அரசியலில் தலைவர் பதவி என்று பல காரியங்களைப் பற்றி கூறுவார்கள்.. இந்த பூமிக்குரிய இடத்தைக்காட்டிலும் ஒரு மேலான இடம் காணப்படுகிறது. அது பரலோகத்தில் காணப்படுகிறது. அதுவும் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடமாய் காணப்படுகிறது.
மேலான இடத்தை சுதந்தரிப்பதற்கான அடிப்படையான ஒரு சில காரியங்களை நாம் கடைபிடிக்க வேண்டுமென்பதாக ஆவியானவர், கொலோசெயர் 3ம் அதிகாரத்தில் சொல்லியிருப்பதை பார்க்கலாம். விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை அழித்துப்போடவேண்டும். கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களில் காணப்படலாகாது. தூஷணமும், வம்பும் இவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும். பொய் சொல்லாமல் பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துப்போட்டு புதிய மனுஷனாக வேண்டும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும். அன்பாய் இருக்க வேண்டும். இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி ஸ்தோத்தரிக்க வேண்டும். மனைவி, புருஷன், பிள்ளைகள், பெற்றோர்கள், வேலைக்காரர்கள், எஜமான்கள் ஆகிய எல்லோரும் கர்த்தர் சொன்ன உபதேசத்தின் படி செயல்படவேண்டும். எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யவேண்டும் என்பதாக.
பவுல் பிலிப்பு சபைக்கு எழுதும்போது என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலிப்பியர் 3 : 8 ) என்று சொல்வதை பார்க்கிறோம். உலகத்திலுள்ள அறிவு, படிப்பு, மேன்மை, பட்டம், ஐஸ்வரியம், புகழ்ச்சி, சொத்து, இடம் எல்லாம் அழிவுக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகலாம். ஆனால் நித்தியமாக நாம் சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய பொக்கிஷங்கள் கிருஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கும் இடத்தில் உள்ளது. அநேக மிஷினரிகள் பூமிக்குரிய எல்லா ஆசைகளும் துறந்து, நாடு விட்டு நாட்டிற்கு வந்து சுவிசேஷத்தை சொன்னதற்கு காரணம் அவர்கள் மேலானவைகளை சுதந்தரித்துக்கொள்ளும்படியாக.
நல்ல போராட்டத்தை போராடுங்கள். பந்தயத்தில் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். ஓட்டத்தை ஜெயமுடன் முடித்தேன் என்று சொல்லத்தக்கதாக ஓடுங்கள். மேலானவைகளை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org