1 கொரி 13:9,10 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Po9q2dZyLqQ
யாரவது ஒருவரிடம் போய் உனக்கு அறிவில்லை என்றோ, இல்லையென்றால் உனக்கு கொஞ்சம் அறிவு தான் இருக்கிறது என்றோ சொன்னாலோ, கேட்கும் நபருக்கு இயல்பாகவே கோபம் வந்துவிடும். ஆகையால் தான் பவுல் சொல்லும்போது மற்றவர்களை புண்படுத்திவிடக்கூடாது என்பதற்காக உங்களுடைய அறிவு என்று சொல்லாமல், நம்முடைய அறிவு என்று அவனையும் உள்ளடக்கி, நமக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது என்று சொல்லுகிறான். அநேக வேலைகளில் எனக்கு எல்லாம் தெரியும், நான் வேதத்தை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன், எனக்கு வேத அறிவு இருக்கிறது என்று நினைப்பதால் தான், கர்த்தரிடமிருந்து வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை.
இந்த உலகத்தில் பிறந்த தலைசிறந்த அறிவியல் வல்லுனர்களில் ஒருவர் தான் ஐன்ஸ்ட்டின். அவர் கண்டுபித்த இயற்பியல் தான் தலை சிறந்தது. இன்றைக்கு அவர் கண்டுபிடித்த சூத்தரமாகிய E = mc² வைத்து தான் அநேக பாடங்கள் காணப்படுகிறது. அவ்வளவு பெரிய அறிவியல் வல்லுனரை குறித்து ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஐன்ஸ்ட்டின் அவர்கள் அவருடைய வீட்டில் இரண்டு பூனையை வளர்த்துக்கொண்டிருந்தாராம். அவற்றில் ஒரு பூனை அளவில் பெரியது, மற்றொரு பூனை அளவில் சிறியது. அந்த இரண்டு பூனைகளும் வெளியே சென்று வீட்டிற்குள் வருவதற்கு இரண்டு துவாரங்களை வீட்டில் போட்டிருந்தாராம். ஒரு துவாரம் சிறிய பூனை வெளியே போய் வருவதற்கேற்றவாறு சிறிய துவாரமாகவும்; மற்றொரு துவாரம் பெரிய பூனை வெளியே போய் வருவதற்கேற்றவாறு பெரிய துவாரமாகவும் போட்டு வைத்திருந்தார். ஒரு நாள் ஐன்ஸ்ட்டின் அவரக்ளின் நண்பன் அவரை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது, ஏன் இரண்டு துவாரங்கள் வீட்டில் இருக்கிறது என்று கேட்டார். அதற்கான விளக்கத்தை ஐன்ஸ்ட்டின் அவர்கள் தன்னுடைய நண்பருக்கு சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் பெரிய துவாரம் மாத்திரம் போட்டிருந்தால், பெரிய பூனையும் அதற்குள்ளாக செல்லும், சிறிய பூனையும் அதற்குள்ளாக செல்லுமே என்று சொன்னாராம். உடனே ஐன்ஸ்ட்டின் அவர்கள், ஐயோ இவ்வளவு நாள் இந்த அறிவு எனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று சொன்னாராம். இயற்பியல் வல்லுநராகிய பெரிய அறிவாளி ஐன்ஸ்ட்டின் கூட அறிவில் குறைவுள்ளவராக தான் காணப்பட்டார்.
அதுபோல தான் நாமும் அறிவில் குறைவுள்ளவர்கள். வேதத்தை வாசிக்கும் போது, ஒவ்வொருநாளும் திறந்த மனதோடு, இன்னும் இயேசுவை அறிகிற அறிவில் வளர வேண்டும் என்றே வாசிக்கவேண்டும். ஒரு ஊழியக்காரர் சொன்னார், மிருகங்களுக்கு ஐந்து அறிவு காணப்படுகிறது, மனிதனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு காணப்படுகிறது. அந்த பகுத்தறிவு என்பது இயேசுவை அறியும் அறிவு தான் என்று கூறினார். ஏன் ஆண்டவர் மனிதர்களுக்கு பகுத்தறிவை கொடுத்தார்.? காரணம் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள், இயேசுவை குறித்து அறியும் அறிவில் வளரவேண்டும் என்பதற்காகவே. இதைத்தான் பவுல் சொல்லும்போது சொல்லுகிறான், கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரி 2:14) என்பதாக. அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று பிலி 3 :8ல் கூறுகிறார். ஆகையால் ஒவ்வொருநாளும், நமக்கு அறிவு இருக்கிறது என்றெண்ணி நின்றுவிடாமல், கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவில் வளருவோம். நிறைவான இயேசுவை நாம் அறியும்போது, குறைவான அரைகுறை அறிவும் ஒழிந்துபோகும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

