லூக் 3:21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UxKdOF_Ebek
லூக்கா எழுதின சுவிசேஷத்தை எழுதியவர் லூக்கா என்றழைக்கப்படுபவர். அவர் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம்பெற்ற ஒரு மருத்துவர். நான்கு சுவிசேஷங்களில் மற்றவர்கள் இயேசுவின் ஜெப பழக்கத்தை எழுதியதை காட்டிலும் லூக்கா என்ற மருத்துவர், இயேசுவின் ஜெப வாழ்க்கையை குறித்து அதிகமாக எழுதியிருக்கிறார்.
இயேசு வனாந்திரத்தில் இருக்கும்போது அவர் ஜெபித்ததை குறிப்பிட்டிருக்கிறார். லூக் 5:16ல் அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு மலையின் மேல் ஏறி இரவு முழுவதும் ஜெபம் செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். லுக் 6:12ல் அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு தன்னுடைய சீஷர்களோடு சேர்ந்து ஜெபித்ததை லூக்கா என்ற மருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார். லுக் 9:28ல் இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று போதித்ததை லூக்கா என்ற மருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார். லூக் 11:1ல் அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் என்னவென்றால், மருத்துவர்களால் செய்ய முடியாததை ஜெபம் செய்து முடிக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். லூக்கா மருத்துவராக இருந்தாலும், ஜெபத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக திகழ்ந்தார். ஆகையால் தான் இயேசுவின் ஜெபத்தை குறித்து அதிகமாக அவர் எழுதியிருக்கிறார். மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்கும்படியாக ஞானத்தையும் அறிவையும் கர்த்தர் தான் மனுகுலத்திற்கு கொடுத்தார். ஆனால் மருந்து மாத்திரைகளை மாத்திரம் நம்பி அதை கண்டுபிடிக்கும்படியாக ஞானத்தை அருளிய தேவனை மனுக்குலம் மறந்துபோய்விட்டது. வியாதியின் நேரத்திலும், உடல் பெலவீனமான நேரத்திலும் மருத்துவர்களை அணுகுவது நல்லது; மாத்திரை மருந்துகளை வாங்கி உட்கொள்ளுவதும் நல்லது. அதற்குமேலாக, வியாதியிலிருந்து விடுதலையை பெற ஜெபத்தின் மீது ஒவ்வொருவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். காரணம் மருத்துவர்களால், தலைசிறந்த மருத்துவமனைகளால், உயர்தரம் வாய்ந்த மாத்திரைகளால் செய்ய முடியாததை ஜெபம் செய்யும். நம்முடைய நாட்டில் தலைசிறந்த CMC Vellore போன்ற மருத்துவமனைகளை உருவாக்கியது ஜெபத்தில் தங்களை ஊற்றிய மிஷினரிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகையால் லூக்கா மருத்துவர் குறிப்பிட்ட இயேசுவின் ஜெபவாழ்க்கையை நாம் முன்மாதிரியாக வைத்து ஜெபத்தில் அனுதினமும் பெருகுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

