தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. ஏசாயா 64:4.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/vjRf6xP8bHk
துரிதமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் விரும்புவது உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பொறுமையின்மையை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. ஆனால் வேதம் பொறுமையோடு கர்த்தருக்காக, அவருடைய வேளைக்காக, காத்திருங்கள் என்று ஆலோசனை சொல்லுகிறது. அப்படிக் காத்திருக்கிறவர்களுக்குக் கர்த்தர் செய்பவைகளை, உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
ஒருநாள் கர்த்தர் ஆபிராமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:5,6). ஆனால் அந்த விசுவாசத்தில் பொறுமையாய் நிலைத்திருக்க ஆபிராமால் முடியவில்லை. அனேக வருடங்கள் பிள்ளையில்லாததினால் ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து ஆகாரையும் தன் மனைவியாக்கிக் கொண்டான். அவள் மூலம் இஸ்மவேலைப் பெற்றெடுத்தான். அந்த சந்ததி வாக்குத்தத்தின் சந்ததிக்கு இன்றும் எதிராகக் காணப்படுகிறது. வாக்குத்தத்தின் நிறைவேறுதலுக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள். நம்முடைய பொறுமையின்மை அனேக நன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் இழந்து போகச்செய்து விடும். அனேக வேதனைகளால் உங்களை உருவக் குத்திவிடும். இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், சாமுவேல் தீர்க்கத்தரிசி வந்து சர்வாங்கதகனபலியை செலுத்த காத்திருக்கமுடியவில்லை. ஏழுநாட்கள் கடந்துவிட்டது. ஜனங்கள் தன்னை விட்டுச் சிதறிப்போகத் துவங்கினார்கள். ஆகையால் ஜனங்களைப் பிரியப்படுத்தும்படி சவுல் துணிந்து ஆசாரியர்கள் செலுத்த வேண்டிய சர்வாங்கதகனபலிகளை தானே செலுத்தினான். அதன் விளைவு தன் ராஜ்யபாரத்தை இழந்துபோனான். தேவப்பிரசன்னத்தை இழந்து போனான். ஜனங்களைப் பிரியப்படுத்துவது தேவ ஆசீர்வாதங்களை இழந்துபோகும்படிக்குச் செய்துவிடும்.
சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்@ அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங். 40:1) என்று கூறினார். தன்னுடைய வேண்டுதல்களை ஆண்டவரிடம் அறிக்கைசெய்தபின்பு பதிலுக்காக பொறுமையுடன் காத்திருந்தார், கர்த்தர் அவரிடமாய் சாய்ந்து அவருடைய வேண்டுதல்களைக் கேட்டார். அனேக நாட்களாகக் குறிப்பிட்ட காரியங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள். உங்கள் அற்புததத்தின் வேளை வருகிறது. நீங்கள் விரும்புவது கர்த்தரிடத்திலிருந்து வரும். கர்த்தர் உங்களை மகிழப்பண்ணுவார். உங்கள் கூப்பிடுதலைக் கேட்பார்.
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; ஆனால் விரும்பினது வரும்போது அது ஜீவவிருட்சம்போல் இருக்கும் என்று வேதம் கூறுகிறது. காத்திருந்து சோர்ந்துபோனீர்களோ? ஒருநாள் இஸ்ரவேலின் ராஜா, நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன (2 ராஜா. 6:33) என்று கேட்டான். ஆனால் காத்திருந்ததின் விளைவு அடுத்த நாள் பஞ்சம் முழுவதுமாய் விலகி, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் தாராளமாய் கிடைக்கும்படிக்குக் கர்த்தர் எலிசா தீர்க்கத்தரிசியின் வார்த்தையின்படி செய்தார். சோர்ந்து போகாமல் காத்திருங்கள். காத்திருக்க வேண்டிய பெலனைக் கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசா.40:29-31).
கர்த்தர் தாமே பொறுமையுடன் காத்திருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar