நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ob6EbFXS2Yc
ஏசாயா தீர்க்கத்தரிசி இயேசுவுக்கு முன் சுமார் 700 வருஷங்களுக்கு முன்பாக வாழ்ந்தவர். இயேசுவின் பிறப்பைப் பற்றி அனேக தீர்க்கத்தரிசனங்களைக் கூறினவர். ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசாயா 7:14). இயேசு கன்னிகையின் மூலமாகப் பிறப்பார் என்றும் அவர் இம்மானுவேலாய் நம்மோடு எப்போதும் இருப்பார் என்றும் முன்கூறினார். அதுபோல இயேசு நமக்காகத் தேவனால் கொடுக்கப்பட்டப் பாலகன் என்றும் அறிவித்தார்.
இயேசு பூமியில் காணப்படுகிற அத்தனை பேருக்கும் ஈவாகக் கொடுக்கப்பட்டவர். மனுக்குலததின் ஆசீர்வாதத்திற்காக, இரட்சிப்பிற்காகப் பிதாவாகிய தேவனால் தந்தருளப்பட்டவர். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). இயேசு நமக்காகப் பிறந்த பாலகன், நமக்காகக் கொடுக்கப்பட்ட குமாரன். ஆனால் நமக்காக கொடுக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் அனேகர் காணப்படுகிறார்கள். பரலோக ஈவை உதாசீனப்படுத்துகிறார்கள். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12). அழிவிலிருந்து நம்மை தப்புவிக்கும்படியாய், பாவங்களை நீக்கி நம்மை இரட்சிக்கும்படிக்காகப் பிறந்தவரை ஏற்றுக்கொள்ளுவது மேலான பாக்கியமாய் காணப்படுகிறது.
இயேசு பாலகனாய் பூமியில் தோன்றினாலும் அவர் தேவ குமாரன். தேவன் நம்மை இரட்சிக்கும்படிக்கு மனுஷ சாயலானார். அவரே மேசியா. ஆகையால் ஏசாயா அவரைக்குறித்துக் கூறும் போது கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும் என்றார். சகலவற்றின் மேலும் அதிகாரம் உடையவர். சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது (ரோமர் 11:36). பூமியில் எத்தனை பேர் அதிகாரங்கள் செலுத்தினாலும் அத்தனையும் இயேசுவின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகிறது. நேபுகாத்நேச்சாரை தனக்கு முன்பாக மண்டியிட வைத்தவர். பார்வோனின் அதிகாரத்தை முடக்கிப்போட்டவர். எல்லா அரசாங்கங்கள் செலுத்துகிற அதிகாரங்கள் எல்லாம் இயேசுவின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகிறது. அவரே நமக்காய் கொடுக்ப்பட்ட பரலோக ஈவு. அவருடைய நாமம் அதிசயம். மனோவா உம்முடைய நாமம் என்ன என்று கேட்டவேளையில், என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே-32:27). அவர் அதிசயங்களை செய்கிறவர். அதிசயமானவரை நீங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்வார்.
நமக்காய் ஈவாய் கொடுக்கப்பட்டவர் ஆலோசனைக் கர்த்தரும் கூட. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும் (சங்-16:7) என்று சங்கீதக்காரன் நன்றியோடு கூறினான். கர்த்தருடைய ஆலோசனையே என்றும் நிற்கும். அவர் உங்களுக்கு நல் ஆலோசனைகளைத் தந்து நடத்துவார். இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கற்றுத் தருவார். அவர் வல்லமையுள்ள தேவன். உங்களுக்காக யுத்தம் செய்வார். நம்முடைய பிரச்சனைகளுக்காக நாம் போராட வேண்டியதில்லை. அவர் சகலவற்றையும் பார்த்துக்கொள்ளுவார். கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காத படியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும் (எரே. 20:11). இயேசு நம்முடைய நித்திய பிதா. சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பாக நம்மை இரட்சிக்கும்படிக்குப் பாலகனாய் அவதரித்தாலும் அவர் நித்தியமாய் இருக்கிற நல்ல தகப்பன். அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர். அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைக்கும் அத்தனை பேருக்கும் பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கொடுக்கிறவர். அவரே நம்முடைய தகப்பன். உங்களுக்காக ஈவாய் கொடுக்கப்பட்ட குமாரனே உங்களுடைய நித்திய பிதாவாகவும் காணப்படுகிறார். பொல்லாத உலகத்தின் தகப்பன்மார்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கும் போது பரம தகப்பன் நிறைவான ஆசீர்வாதங்களைத் தந்து உங்களை நடத்துவது நிச்சயம். அவருடைய நாமங்களின் ஒன்று சமாதானப்பிரபு. அவர் பூமியில் அவதரித்த வேளையில் சமாதானம் வந்தது. மனுஷர் மேல் பிரியம் வந்தது. பிதாவாகிய தேவனுக்கும் மனுஷர்களுக்கும் இடையே இருந்த பகைமை மாறினது. நமக்காய் ஈவாகக் கொடுக்கப்பட்டவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது பரலோக சமாதானம் நம்வாழ்வை நிரப்பும். எல்லாச் சூழ்நிலைகளிலும் சமாதானத்தோடு வாழ உதவிசெய்வார்.
உங்களுக்காகக் கொடுக்கப்பட்ட பரலோக ஈவை பறக்கணித்துவிடாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar