அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான் (1 சாமுவேல் 7:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/f1hGaNBtuCE
ஒரு வருஷத்தின் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். இந்த வருடம் முழுவதும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்துகிற நேரம் இது. கர்த்தர் செய்த உபகாரங்களை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக பெலிஸ்தியர்கள் யுத்தத்திற்கு வந்தார்கள். இஸ்ரவேலர்கள் சாமுவேலைப் பார்த்து, கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டார். அப்போது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், அவர்களை முறிய அடித்தார்கள். அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
இம்மட்டும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துவது தான் மேன்மேலும் நாம் ஆசீர்வதிக்கப்படுவதின் வழியாகக் காணப்படுகிறது. ஆனால் கர்த்தர் செய்த உதவிகளை மறந்துவிடுகிறோம். நம்முடைய சாமர்த்தியத்தினால், கைபெலனால் எல்லாம் வந்தது என்று எண்ணும்படி சத்துரு செய்கிறான். தாழ்வில் நம்மை நினைத்து உதவி செய்தவரை மறக்கும்படிக்குச் செய்கிறான். நம்மை மேட்டிமை கொள்ளும்படி செய்கிறான். நேபுகாத்நேச்சார் ஒரு நாள் பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த மேட்டிமையின் வார்த்தைகள் அவன் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து; தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அப்படியே அவன் வாழ்க்கையில் சம்பவித்தது. ஏழு வருடங்கள் வனாத்திரத்தில் புல்லை தின்கிறவனாகக் காணப்பட்டான். கடைசியாய் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான். ஆகையால் ஒருபோதும் நம்மால் எல்லாம் வந்தது என்று அகந்தையாய் சொல்லாதிருங்கள்.
சம்பாதிக்கப் பெலன் கொடுக்கிறவர் கர்த்தர் என்று வேதம் கூறுகிறது. நோயில்லாத வாழ்வைக் கொடுக்கிறவர் கர்த்தர். சமாதானமுள்ள குடும்ப வாழ்க்கையைக் கொடுப்பவர் கர்த்தர். நல்ல பிள்ளைகளைக் கொடுப்பது கர்த்தர். நல்ல வேலைகளைக் கொடுத்து நம்மை உயர்த்தி வைத்திருப்பவர் கர்த்தர். ஊழியத்தைக் கொடுத்தவர் கர்த்தர். ஊழியம் தடையில்லாமல் நடக்க உதவி செய்கிறவர் கர்த்தர். நல்ல ஜனங்களைக் கொடுப்பது கர்த்தர். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் ஜோதிகளின் பிதாவிடத்தில் இருந்து இறங்கி வருகிறது.
வருடத்தின் கடைசி நாட்களில் நன்றி பலிபீடம் கட்டி இம்மட்டும் உதவிசெய்த எபெனேசருக்கு நன்றி செலுத்துங்கள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். ரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங். 116:12,13) என்று நாமும் கூறி கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு தொழுதுகொள்ளுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar