என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்கீதம் 103:1,2).
சங்கீதக்காரனாகிய தாவீது தன் ஆத்துமாவைப் பார்த்து நீ கர்த்தரை ஸ்தோத்திரி என்று கூறுகிறான். அதுபோல அவனுக்குள் காணப்படுகிற அத்தனை அவயவங்களும் இணைந்து கர்த்தர் செய்த உபகாரங்களை எண்ணி நன்றி செலுத்தும் படிக்குச் சொல்லுகிறான். அனேக வேளைகளில் நாம் வாயினால் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். ஆனால் நம்முடைய இருதயங்களோ வேறிடங்களில் காணப்படும். சரீரப் பிரகாரமாக ஆலயத்தில் இருப்போம், ஆனால் எண்ணங்கள் அலைபாய்ந்துக் கொண்டு காணப்படும். ஆகையால் தான் ஆண்டவர், இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசா. 29:13) என்று வருத்தத்தோடு சொன்னார். ஒரு வருஷத்தின் கடைசி நாளில் காணப்படுகிற நாம் கர்த்தர் செய்த உபகாரங்களை எண்ணி நம்முடைய முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு உள்ளத்தோடும் கர்த்தருக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
தாவீது, கர்த்தர் தன்னுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை எண்ணிப்பார்க்கிறான். கர்த்தர் அவனுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்ததை நினைத்துப் பார்க்கிறான். பத்சேபாளோடு பாவம் செய்ததையும், துணிகரமாய் அவள் புருஷனைக் கொலை செய்த அக்கிரமத்தையும் எண்ணியிருக்கக் கூடும். நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்கி விடுவித்ததை எண்ணிப் பார்க்கிறான், அவனுடைய ஜீவனை அழிவுக்கு விலக்கி மீட்டதை நன்றியோடு நினைக்கிறான். சிங்கத்தின் வாயிலிருந்தும் கரடியின் வாயிலிருந்தும், சவுலுக்கும், கோலியாத்திற்கும், அப்சலோமின் கரங்களுக்கும் தன் ஜீவனை தப்புவித்ததை நினைத்திருக்கக்கூடும். கர்த்தர் அவனைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, ஆட்டு மந்தையிலிருந்து அவனை தூக்கியெடுத்து அரசனாக்கி உயர்த்தினதை நன்றியோடு நினைக்கிறான். அனேக நன்மையினால் கர்த்தர் அவனைத் திருப்தியாய் ஆசீர்வதித்ததை நினைக்கிறான். கழுகுக்குச் சமானமாய் பெலனைக் கொடுத்து அவனை இளைஞனைப் போல, யுத்த புருஷனாய் மாற்றியதையெல்லாம் எண்ணி, தன்னுடைய ஆத்துமாவைப் பார்த்து, கர்த்தர் செய்த உபகாரங்களுக்காக நன்றி செலுத்தும்படிக்குக் கூறுகிறான்.
கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலும் அனேக நன்மைகளைச் செய்திருக்கிறார். நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்து, நம்மை இரட்சித்தது எல்லா நன்மைகளைப் பார்க்கிலும் மேன்மையானது. இரட்சிப்பின் பாத்திரத்தோடு கர்த்தர் செய்த உபகாரங்களை நினைத்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்கீதம் 116:12,13). நம்முடைய நோய்கள் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் நமக்கு விடுதலை தந்தார். அவருடைய சிறகின்கீழ் இருக்கும் ஆரோக்கியத்தினால் நம்மை இடைகட்டினார். சத்துரு சிங்கத்தைப் போல நம்மை விழுங்கிவிடுவதற்கு வந்த வேளையில் எல்லாம் அவனுடைய வாய்க்கு நம்மை தப்புவித்தார். அவன் வெள்ளம் போல எழும்பின வேளையில் ஆவியானவர் யேகோவா நிசியாக நமக்கு ஆதரவாய் கொடியேற்றினார். நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்படி கர்த்தர் செய்தார். ஆகையால் தாவீதைப் போல நம்முடைய ஆத்துமாவிடமும், கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து, அவருடைய உபகாரங்களை எண்ணி நன்றி சொல்லும் படிக்குக் கூறலாமே.
நாம் அனேக வேளைகளில் நம்முடைய ஆத்துமாவோடு என்னத்தை பேசுகிறோம். ஆண்டவர் ஒரு உவமையின் மூலம் அதைச் சொல்லும் போது, ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. . அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது, நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார் (லூக்கா 12: 16-21). யார் நட்டாலும், தண்ணீர் பாய்ச்சினாலும் விளையச்செய்கிறவர் கர்த்தர். இந்த ஐசுவரியவான் விளையச்செய்கிற கர்த்தருக்கு நன்றி செலுத்தாமல் அவனால் நிலம் நன்றாய் விளைந்தது என்று எண்ணினான். கர்த்தர் செய்த உபகாரங்களை மறந்து போனான். அவனைப்போல, நமக்கு அனேக நன்மைகள் செய்த கர்த்தரை நாம் மறந்து, நம்முடைய கையின் பிரயாசங்களை வாய்க்கப் பண்ணின தேவனை மறந்து, எல்லாம் நம்மால் வந்தது என்று மேட்டிமை கொண்ட தருணங்கள் அனேகம். நாம் புசித்துக் குடித்து திருப்தியாய் வாழ ஆசைப்படுகிறோமே ஒழியக் கர்த்தருக்குரிய கனத்தைச் செலுத்தாமல் காணப்படுகிறோம். இந்த வருஷத்தின் கடைசி நாளிலாகிலும் கர்த்தர் செய்த உபகாரங்களை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறவர்களாய் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar