கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும் (ஏசாயா 34:16).
கர்த்தருடைய புஸ்தகமாகிய வேத புஸ்தகம் சுமார் 1600 வருடங்களில் 40 தேவ மனுஷர்களால் எழுதப்பட்டது. தேவ மனுஷர்கள் பலரால் எழுதப்பட்டதாய் காணப்பட்டாலும், அவைகள் ஒரே ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது (2 தீமத். 3:16). அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதின வார்த்தைகள். நாம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய வார்த்தைக்கு மாணவனாகவே காணப்படவேண்டும். கற்றுக்கொள்ளுகிறவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருடைய வார்த்தை விலையேறப்பெற்ற பொக்கிஷம், விலையுயர்ந்த முத்துக்களைத் தேடுவது போல நாம் தேடி வாசிக்கவேண்டும். செய்தித்தாள்களை வாசிப்பது போல் அல்ல, மற்ற புஸ்தகங்களைப் படிப்பது போலவும் அல்ல, நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிற கர்த்தருடைய பரிசுத்த வார்த்தைகளைப் பயபக்தியோடும், புதையல்களைத் தேடுவது போலத் தேடியும் நாம் வாசிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் குறையாது. கர்த்தருடைய வேதம் குறைவற்றது என்று சங்கீதம் 19:7-ல் எழுதப்பட்டிருக்கிறது. வானமும் பூமியும் ஒழிந்தாலும் கர்த்தருடைய வார்த்தை ஒன்றும் ஒழிந்துபோவதில்லை. கர்த்தருடைய வார்த்தைகள் வானங்களில் நிலைத்திருக்கிறது, அதுவே நம்மை நியாயந்தீர்க்கப் போகிறது. அதுபோல கர்த்தருடைய வார்த்தைகளுக்கு ஜோடி இல்லாமல் இருப்பதில்லை. உதாரணமாக யாத்திராகம் 12-வது அதிகாரம் 2 முதல் 5 வசனங்களை வாசிக்கும் போது அங்கே பஸ்கா ஆட்டுக்குட்டியைக் குறித்து வாசிக்கமுடியும். ஆனால் அந்த பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவைக் குறிக்கிறது என்று 1 கொரிந்தியர் 5:7-ல் வாசிக்கிறோம். ஆக வேதவார்த்தைகளின் விளக்கத்தை வேதத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். அனைத்து வசனங்களுக்கும் ஜோடி வசனங்கள் காணப்படுகிறது. கர்த்தருடைய ஆவியானவர் வசனங்களை இணைக்கிறார். ஆகையால் அவருடைய அபிஷேகம் இல்லாமல் வேதவார்த்தைகளை வியாக்கியானம் செய்யவும் முடியாது. ஆவியானவருடைய துணையின்றி கர்த்தருடைய வார்த்தைகளை விளக்கினால், கேட்பதற்கு இன்பமாகக் காணப்படலாம், ஆனால் கேட்பவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் வருவதில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தருடைய வார்த்தைகளைக் கருத்தாய் வாசியுங்கள், வசனங்களைப் புதையல்களைப் போல தேடி வாசியுங்கள். ஜோடி வசனங்களைத் தேடி கண்டுபிடித்து அர்த்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவனும் இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவனும் பாக்கியவான் என்று வெளி. 1:3-ல் வாசிக்கிறோம். நாம் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவியம் செய்வதற்குக் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கிறவர்களாயும், கேட்கிறவர்களாயும், கைக்கொள்ளுகிறவர்களாயும் காணப்பட வேண்டும். உங்கள் வழிகள் வாய்க்கவேண்டுமா? இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உஙகள் வாயைவிட்டுப் பிரியாமலும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாகவும், இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருந்தால் போதும் என்று வேதம் கூறுகிறது (யோசுவா 1:8, சங். 1:1-3). கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி நம்மைக் குணமாக்குகிறவர், வியாதியிலிருந்து விடுதலையைத் தருகிறவர். கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. கர்த்தருடைய வார்த்தையை நேசித்து வாசிக்கும்போது நம்முடைய வாழ்க்கையில் மிகுந்த சமாதானத்தைக் கட்டளையிடுவார். ஆகையால் கர்த்தருடைய புஸ்தகத்தில் தேடி வாசிப்பதற்கு நம்மை அற்ப்பணித்து, ஆசீர்வதிக்கப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar