நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் (யாத். 20:24).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2N7FhK4SP1I
எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலையண்டை வந்து பாளையம் இறங்கினார்கள். அங்கே கர்த்தர் அவர்களை, எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து ஐம்பதாவது நாள் சந்தித்துப் பேசி, பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அதன் பின்பு, என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்தார். இஸ்ரவேல் சபைக்கு மாத்திரமல்ல, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நமக்கும் கர்த்தருடைய வார்த்தை வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது.
தேவனுடைய நாமத்தை உயர்த்துகிற எந்த இடத்திலும் கர்த்தர் வருவார், இரண்டோ மூன்றோ பேர் ஒருமனப்பட்டுக் கூடிவந்து அவருடைய நாமத்தை உயர்த்தும் போது கர்த்தர் அங்கே இருக்கிறார். இயேசு சமாரியா ஸ்திரியோடு பேசும் போது, எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்று அவள் சொன்ன வேளையில், இயேசு அவளை நோக்கி, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது என்று கூறினார். ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிற எல்லா இடங்களிலும் அவர் வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தருடைய நாமத்திற்குரிய கனத்தையும் மகிமையையும் செலுத்தி, பயபக்தியோடு அவருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா. 42:8). ஆனால் கடைசி நாட்களில் கர்த்தருடைய நாமம் எங்கும் கனவீனம் பண்ணப்படுகிறது. அவருடைய நாமம் அசட்டைச் செய்யப்படுகிறது. தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர் (சங். 89:7) என்று வேதம் கூறுகிறது. இந்நாட்களில் ஆண்டவரைக் குறித்த பயமும் பக்தியும் ஜனங்கள் நடுவில் குறைந்து கொண்டு வருகிறது. பரிசுத்தத்தைக் குறித்த பயம் ஜனங்கள் நடுவில் இல்லை. இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள் என்று சங்கீதம் 12:1-ல் எழுதப்பட்டிருக்கிறது உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது என்றும் வேதம் கூறுகிறது. பக்தியுள்ளவர்களையும் உண்மையுள்ளவர்களையும் ஜனங்கள் மத்தியில் காண்பது கடினமாய் காணப்படுகிறது. குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார் (மல். 1:6). ஊழியக்காரர்களும் கர்த்தருடைய நாமத்தை அசட்டைச் செய்கிறார்கள். கர்த்தருடைய நாமம் கனவீனம்பண்ணப்படுவதற்குக் கர்த்தருடைய ஜனங்களும், ஊழியக்காரர்களும் அனேக வேளைகளில் காரணமாயிருக்கிறார்கள். ஆகையால், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதற்கு நாமே தடைகளாய் காணப்படுகிறோம்.
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி; பரிசுத்த அலங்காரத்துடனே அவரை தொழுதுகொள்ளும்போதும், பயபக்தியோடு அவருடைய நாமத்தை உயர்த்தும் போதும், அவர் வந்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்களுடைய வீடுகள், ஆலயம், எந்த இடங்களானாலும், அவ்விடத்தில் கர்த்தர் வந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar