ஏசா 60 : 2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/SP__AMqKNkg
மேற்குறிப்பிட்ட வசனத்தில் இருளானது பூமியை மூடிக்கொள்ளும் என்ற தீர்க்கதரிசனத்தை வாசிக்கிறோம். காரிருள் நிறைந்த அடர்ந்த காட்டிற்குள் நடந்து செல்லும்போது, வழியில் என்ன இருக்கும் என்றே நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட பாதையில் நடந்து செல்லும்போது, தட்டு தடுமாறி மாத்திரமல்ல, பயத்தோடும் திகிலோடும் தான் நடப்போம். காரணம் வழியில் எந்த விலங்கு, எந்த மிருகம் பதுங்கியிருக்கும் என்றே தெரியாது. தெரியாமல் அதை மிதித்தால் வரும் விளைவுகள் கொடுமையாகத்தான் இருக்கும்.
இப்படிப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும் காலத்தில், தேவபிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னார். நீங்கள் தான் வெளிச்சம் தருபவர்கள் என்பதை சபை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பூமியை சூழ்ந்திருக்கும் அந்தகார இருளின் மத்தியில் சபை வெளிச்சமாக திகழ வேண்டும். ஒளிக்கும் இருளுக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ, அதுபோல சபையானது உலகப் பழக்கவழக்கங்களுக்கும் நோக்கத்திற்கும் வேறுபட்டிருக்க வேண்டும். உலகம் பாவத்தில் மடிந்து வீழ்ந்துகொண்டிருக்கும்போது, சபையானது பரிசுத்தத்தில் வளர வேண்டும். உலகத்து ஜனங்கள் பெருமையாய் இருக்கும்போது, சபை ஜனங்கள் தாழ்மையான ஜீவியம் வாழ வேண்டும். உலகத்தில் பகை, சண்டைகள், விரோதங்கள் வளர்ந்துகொண்டிருக்கும்போது, சபை தேவ அன்பில் வளர வேண்டும். ஐசுவரியத்தின் மயக்கத்தினால் உலகம் தேடும்போது, சபை தேவனுடைய இராஜ்ஜியத்தை அதிகமாகத் தேட வேண்டும். தீமைக்கு தீமை செய்ய வேண்டும் என்று உலகம் துடித்துக்கொண்டிருக்கும்போது, சபை தீமைக்கு நன்மை செய்ய வேண்டும். பூமியை இருள் சூழும்போது சபை வெளிச்சமாக இருக்கும் என்பது இதுதான்.
இப்படி இருக்கும்போது, ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார், உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள் என்பதாக. நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். இருளின் பிள்ளைகள் சந்துருவை உங்கள் தகப்பனாகக் கொண்டிருப்பீர்களென்றால், அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வாருங்கள். நீதியின் சூரியனாக இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்கள் மேல் உதிப்பது மாத்திரமல்ல, நீங்களும் உலகத்திற்கு வெளிச்சமாய் இருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

