கர்த்தருடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம்.

அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான  பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள் (யோவான் 2:17).

இயேசு, தன்னுடைய மூன்றரை வருட ஊழியத்தின் துவக்கத்திலும், முடிவிலும் எருசலேம் தேவாலயத்தில் வாங்குகிறவர்களையும்; விற்கிறவர்களையும் துரத்தி ஆலயத்தைச் சுத்திகரித்தார் (யோவான் 2:13-17, மத். 21:12-13). தேவனுடைய வீடு துவக்கத்திலாகிலும் வியாபார வீடாய் இருந்தது. ஆனால், கடைசியில் அதைக் கள்ளர் குகையாக்கிவிட்டார்கள், ஆகையால், கர்த்தருடைய வீட்டைக்குறித்த பக்தி வைராக்கியம் இயேசுவை பட்சித்தது. கர்த்தருடைய மணவாட்டி சபை பரிசுத்தம் உள்ளதாய், மகிமை பொருந்தியதாய் காணப்படவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். பரிசுத்தம் உள்ள ஆண்டவர் வந்து உலாவுகிற இடமாகக் காணப்பட வேண்டும். பொல்லாத சத்துரு சபை மக்களைக் கறைப்படுத்தி, மாம்சீக பாவத்திலும், பண ஆசையிலும் விழத்தள்ளி மணவாட்டியைக் கறைப்படுத்த முயற்சிக்கிறான்.

எசேக்கியேல் தீர்க்கதரிசியை கர்த்தருடைய ஆலயத்திற்குக் கர்த்தர் அழைத்துச் சென்றார், நீ சுவரிலே துவாரமிடு என்றார்; அவன் சுவரிலே துவாரமிட்டபோது,  ஒரு வாசல் இருந்தது. நீ உள்ளே போய், அவர்கள் செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்று கர்த்தர் சொன்னார். அங்கே சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.  அங்கே மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். கர்த்தருடைய ஆலயத்தின் வடக்கு வாசலின் நடையிலே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பி சூரியனை நமஸ்கரித்தார்கள் (எசே. 8:6-18). கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை என்று கூறி கர்த்தருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்துகிற மூப்பர்கள், ஸ்திரிகள், புருஷர்கள் கூட்டத்தை தீர்க்கத்தரிசிக்குக் கர்த்தர் காண்பித்தார். இன்றும் அனேக சபைகளில் இவைகளுக்கு ஒத்த காரியங்கள் நடப்பதைப் பார்க்கமுடிகிறது. பரிசுத்த ஸ்தலம் பரிசுத்த குலைச்சலாக்கப்படுகிறது. பரிசுத்த ஸ்தலத்தில் அசுத்தம் காணப்படுகிறது. ஊழியர்களுக்குள்ளும் கர்த்தருடைய பரிசுத்தத்தைக் குறித்த பயபக்தி இல்லை. இதனிமித்தம் இயேசுவின் இருதயம் மிகவும் வேதனைப்படுகிறது, ஆகையால் தான் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு கர்த்தருடைய வீட்டிலிருந்து துவங்கும் என்று கர்த்தர் சொன்னார்.

கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களைக் கர்த்தருடைய கண்கள் நோக்கிப்பார்க்கிறது. பினகாஸ் என்ற வாலிபன், இஸ்ரவேல் சபை மக்கள் மோவாபிய, மீதியானிய ஸ்திரீகளோடு பாவம் செய்த வேளையில், அவர்கள் மத்தியில் கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டினான். அவன் சபையைப் பரிசுத்தப் படுத்தினதினால் கர்த்தருடைய கோபாக்கினையின் வாதை நிறுத்தப்பட்டது. ஆகையால் கர்த்தர் நித்திய ஆசாரிய பட்டத்தை அவனுக்கும் அவன் சந்ததிக்கும் கொடுத்து அவனைக் கனம் பண்ணி, ஆசீர்வதித்தார். கர்த்தருக்காக நீங்கள் வைராக்கியம் பாராட்டும் போது கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார். யெகூ, கர்த்தருக்காக எனக்கு இருக்கும் பக்தி வைராக்கியத்தைப் பார் என்று சொல்லி, யேசபேலுக்கு விரோதமாக, ஆகாபின் குடும்பத்திற்கு விரோதமான கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினான். பாகாலின் சகல ஊழியக்காரர்களையும் நிர்மூலமாக்கினான். பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி, பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை மலஜலாதி இடமாக்கினான். யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டதினால், கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்(2 இரா.10:30).

இயேசுவைப் போல, பினகாஸ், யெகூவைப் போல, கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களாக நாம் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பாவங்கள், அசுத்தங்களோடு சபையில் நடக்கிற சம்பவங்களுக்குப் பரவாயில்லை என்று கூறி ஒத்துப்போகாதிருங்கள். மேய்ப்பர்கள், ஏலியைப் போல தன் பிள்ளைகள், விசுவாசப் பிள்ளைகள் பாவம் செய்வதைக் கண்டும் காணாமல் இருந்து விடாதிருங்கள். கணக்கு கேட்கிற எஜமானாகக் கர்த்தர் வரப்போகிறார். கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டும் போது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *