பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன் (லூக்கா 12:49).
இயேசு, பூமியில் வந்ததன் நோக்கமும், அவருடைய விருப்பமும் மேற்குறிப்பிடபட்ட வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாய் பூமியில் வந்ததற்கு அனேக காரணங்கள் உண்டு, இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவும் பூமியில் அவதரித்தார். நீயாயப்பிரமாணங்களையும் தீர்க்கத்தரிசனங்களையும் நிறைவேற்றுவதற்கு வந்தார், பிசாசின் கிரியைகளை அழிக்கும் படிக்கும் மனுஷகுமாரன் வந்தார், இப்படிப்பட்ட காரியங்களில் ஒன்று அவர் அக்கினியைப் போடுவதற்கும் வந்தார்.
நம்முடைய தேவன் அக்கினமயமானவர். அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலை (வெளி. 1:14, 2:18), அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போன்றது (வெளி. 1:16), அவருடைய முழுச்சரீரம் அக்கினி (எசே. 1:27), அவருடைய சிங்காசனம் அக்கினியாய் காணப்படுகிறது, அக்கினி நதி அதிலிருந்து புறப்பட்டு வருகிறது (தானி. 7:9). சிங்கத்தின் குட்டிகள் சிங்கமாய் காணப்படுவது போல, அக்கினி மயமான தேவனின் பிள்ளைகள் அக்கினியாகக் காணப்படவேண்டும் என்பது அவருடைய விருப்பம். பழைய ஏற்பாட்டில் பலி செலுத்தப்பட்ட இடங்களில் அக்கினியாக இறங்கி வந்தவர், பெந்தெகோஸ்தே நாளிலிருந்து நம்முடைய இருதயமாகிய பலிபீடங்களில் அக்கினியாய் இறங்குகிறார், அக்கினி மயமான நாவுகளாய் வந்து அமருகிறார். கர்த்தருடைய அக்கினி உங்களுடைய பாவத்தின் அழுக்கைச் சுட்டெரிக்க வல்லமையுள்ளது, ஏசாயா பரிசுத்தமுள்ள சேனைகளின் கர்த்தரைக் கண்ட உடனே, நான் அசுத்த உதடுகள் உடையவன், அசுத்த உதடுகள் உள்ள ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுகிறேன், ஐயோ அதமானேன், சேனைகளின் கர்த்தரை என் கண்கள் கண்டதே என்று கதறினான். உடனே பலிபீடத்திலிருந்து ஒரு நெருப்புத்தழலை எடுத்துவந்து தேவ தூதன், அக்கினி உன் நாவைத் தொட்டதினால் உன் அசுத்தங்கள் விலகினது என்றான். அதுபோல, அக்கினி சத்துருவின் கிரியைகளை அழிக்க வல்லமையுள்ளது. மெலித்தா தீவில் அப்போஸ்தலனாகிய பவுலின் கரங்களில் விரியன் பாம்பு கடித்த வேளையில், அதை அக்கினியில் உதறித்தள்ளினான் என்று வேதம் கூறுகிறது. அதுபோல, பரிசுத்தமாய் ஜீவிக்க, சத்துருவின் சகல வல்லமைகளையும் அக்கினியால் சுட்டெரிக்க, நமக்குக் கர்த்தருடைய அக்கினி அவசியம். கர்த்தருடைய அக்கினி நம்மைப் பாதுகாக்கிறது. எருசலேமைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பேன் என்றவர், உங்களைச் சுற்றிலும், உங்கள் பிள்ளைகளைச் சுற்றிலும், உங்கள் குடும்பங்களைச் சுற்றிலும், உங்கள் ஊழியங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பார். அக்கினி ஸ்தம்பம் பார்வோனையும் அவன் சேனையையும் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கவிடாமல் காத்தது போல, சத்துருவின் கிரியைகள் உங்களைத் தொடாதபடி கர்த்தருடைய அக்கினி உங்களைக் காக்கும்.
எலியாவின் பலிபீடத்தில் கர்த்தருடைய அக்கினி இறங்கின வேளையில் பின்மாற்றத்தில் காணப்பட்ட ஜனங்கள், இரு நினைவுகளினால் குந்திக்குந்தி நடந்தவர்கள் கர்த்தரே தெய்வம் என்று முழங்கி எழுப்புதல் அடைந்தது போல, தேவ அக்கினி நம்மில் இறங்கும் போது நாம் எழுப்புதல் அடைவோம், நம்முடைய சபைகள் எழுப்புதல் அடையும், நம் தேசம் எழுப்புதல் அடையும். முட்செடியின் அக்கினி மோசேயைக்கிட்டி இழுத்தது போல, நம்மில் எரிகிற அக்கினி, அனேகரைக் கர்த்தரண்டை இழுக்க உதவிசெய்யும். யோவான் ஸ்நானகனுக்குள் இருந்த அக்கினி எரிந்து பிரகாசித்ததினால், அனேகர் அவன் வெளிச்சத்தில் நடக்க மனமாயிருந்தார்கள். அதுபோல உங்களில் எரியும் அக்கினியைக் கண்டு, அந்த வெளிச்சத்தினால் அனேகர் கர்த்தரண்டை இழுக்கப்படுவார்கள். எழுப்புதலின் அக்கினியை இந்த கடைசி நாட்களில் கர்த்தர் உங்கள் மேல் போட விரும்புகிறார். நம் இருதயமாகிய பலிபீடத்தின் மேல் கர்த்தர் போடுகிற அக்கினி எப்பொழுதும் பற்றியெரிய வேண்டும், அது ஒருபோதும் அவிந்துபோகலாகாது என்பது கர்த்தருடைய வாஞ்சை. அந்த அக்கினி உங்கள் மூலம் தேசங்கள் முழுவதும் பற்றிப் பரவிச் செல்ல கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுகிற பாத்திரங்களாய் காண நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar