நான் சீக்கிரமாய் வருகிறேன்

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென்,  கர்த்தராகிய இயேசுவே,  வாரும் (வெளி. 22:20).

கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் கொடுத்த கடைசி வாக்குத்தத்தம் நான் சீக்கிரமாய் வருகிறேன் என்பதாய் காணப்படுகிறது. அதுபோல கடைசியாகக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையும் கர்த்தருடைய வார்த்தையில் நாம் ஒன்றையும் கூட்டவும் கூடாது,  ஒன்றையும் குறைக்கவும் கூடாது. வெளிப்படுத்தல் விஷேசத்தில் ஏழு முறை சீக்கிரமாய் வருகிறேன் என்ற வார்த்தை வருகிறது,  அதில் மூன்று முறை கடைசி அதிகாரத்தில் 7, 12, 20-வது வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது.  நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்கள் கர்த்தருடைய வருகையின் நாட்களாய் காணப்படுகிறது,  உலகத்தின் முடிவுக்கும்,  உம்முடைய வருகைக்கும் அடையாளம் என்ன என்று இயேசுவிடம் சீஷர்கள் கேட்ட வேளையில் ஆண்டவர் சொன்னார்,   ஒருவரும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,  ஏனெனில்,  அநேகர் வந்து,  என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி,  அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்,  ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்,  ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும்,  கொள்ளைநோய்களும்,  பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு கூறினார். இவைகள் எல்லாம் நம்முடைய நாட்களில் நிறைவேறிக்கொண்டு காணப்படுகிறது,  ஆகையால் தான் கர்த்தருடைய வருகை எப்பொழுது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அறிவியலிலும்,  தொழில் நுட்பங்களிலும் அதிகமாய் வளர்ந்தபின்பு கூட,  ஒரு சிறிய வைரஸிற்கு முன்பாக தேசங்களால் நிற்கமுடியவில்லை. பயமும்,  திகிலும்,  கலக்கங்களும் தேசத்தின் குடிகளைப் பிடித்திருக்கிறது. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுகிற பரியாசக்காரர்களும்,  வருகையை நம்பாத கிறிஸ்தவர்களும் கூட இந்த கடைசி நாட்களில் திரளாய் காணப்படுகிறார்கள். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி,  கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,  நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தரின் நீடிய பொறுமையை நம்முடைய இரட்சிப்பென்று எண்ணி,  அவருடைய வருகையை ஆவலோடு எதிர்கொள்ள நாம் நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.

தேவனுடைய ராஜ்யத்தில் நாம் பிரவேசிக்கச் செய்யவேண்டியது என்ன? சிறுபிள்ளைகளைப் போல இயேசுவை ஏற்றுக்கொண்டு,  மனம் திரும்பவேண்டும் என்று வேதம் கூறுகிறது. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயனோடு கர்த்தர் பேசும் போது,  ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்றும்,  ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்றும் கூறினார். மனம் திரும்பி,  அதற்கு அடையாளமாக ஜலத்தினால் ஞானஸ்நானம் எடுக்கும்போது பரிசுத்தாவியின் முத்திரையைப் பெறுகிறோம். அதன் பின்பு,  வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் நம்முடைய  நீதி அதிகமாய் காணப்படவேண்டும்,  இல்லையென்றால்,  பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 5:20) என்றும் ஆண்டவர் எச்சரித்தார். கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கை முறையாக மாற்றி,  அதன்படி நீதிக்குரிய ஜீவியம் செய்தால் பரலோக ராஜ்யத்தின் பாத்திரவான்களாய் நாம் மாறலாம். அனுதின வாழ்க்கையில் ஒவ்வொரு காரியங்களையும் தேவனுடைய சித்தத்தின் படி செய்யவும் நம்மை அர்ப்பணிக்கவேண்டும். ஒவ்வொருகாரியங்களிலும் இயேசு நம்முடைய இடத்திலிருந்தால் என்னத்தை செய்வாரோ,  அதையே நாமும் செய்யப் பழகவேண்டும்.   பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,  என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத். 7:21) என்பது கர்த்தருடைய வார்த்தையாகக் காணப்படுகிறது. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி,  மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு,  எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள். ஆதி சபையின் நாட்களில் அப்போஸ்தலர்கள் ஒருவரையொருவர் வாழ்த்தும் போது மாரநாதா என்று வாழ்த்துவார்கள்,  அதின் அர்த்தம் கர்த்தர் வருகிறார் என்பதாய் காணப்படுகிறது. நாமும் யோவானைப் போல,  ஆமென்,  கர்த்தராகிய இயேசுவே,  வாரும்,  என்று ஆவலோடு அழைக்கத் தகுதியுள்ளவர்களாய் காணப்படக் கர்த்தர் நமக்கு உதவிசெய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *