எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் (நீதி. 1:33).
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறவர்கள், தங்கள் வீடுகளில் பாதுகாப்போடு வாசம் பண்ணி, எந்த விதமான ஆபத்துகளுக்கும் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள். கர்த்தருடைய சத்தமானது ஞானத்தின் சத்தம், அவருடைய சத்தம் நம்மைக் கூப்பிடுகிறது, வீதிகளிலும், சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், பட்டணத்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிடுகிறது (நீதி. 1:20, 21). இந்நாட்களில் கர்த்தருடைய சத்தத்தைப் பல விதங்களில் நாம் கேட்கிறோம். சபைகளில் கர்த்தருடைய வார்த்தைகள் தொனிக்கிறது, மீடியாக்கள் மூலமாய், தனிப்பட்ட தியானங்கள் மூலம், பாடல்கள், ஆராதனைகள் மூலமாகவும் கர்த்தருடைய சத்தம் தொனித்துக்கொண்டிருக்கிறது. எனக்குச் செவிகொடுங்கள், என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள் (நீதி. 1:23) என்று கர்த்தர் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கிறார். என் ஆடுகள் என்னுடைய சத்தத்தை அறிந்து எனக்கு செவிகொடுத்தால் நலமாயிருக்கும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
கர்த்தருடைய சத்தம் தொனித்துக்கொண்டிருந்தும், நாம் அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காததினால், கவனிக்கத் தவறுவதினால், ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாததினால், நம்முடைய ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நகைப்பார். நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கண்ணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம் பண்ணுவேன் (நீதி. 1:25, 26) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகடியம் பண்ணுவேன் என்பது கர்த்தர் நம்முடைய ஆபத்து வேளையில், நாம் பயப்படுகிற காரியங்கள் வரும் போது, நம்மைக் குறித்து நகைப்பார், அவர் நமக்கு உதவிசெய்வதில்லை. நம்முடைய ஆபத்து வேளையில், நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாலும் அவர் மறு உத்தரவு கொடுப்பதில்லை, அதிகாலையிலே அவரைத் தேடினாலும் காண்பதில்லை. சில வேளைகளில் நாம் நினைப்பதுண்டு, ஏன் கர்த்தர் என்னுடைய ஆபத்தில் உதவிசெய்யவில்லை, ஏன் என்னுடைய பிரச்சனைகளின் நடுவில் கர்த்தர் துணை செய்யவில்லை. ஆனால் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்திருக்கிறோமா, கீழ்ப்படிந்திருக்கிறோமா என்று நம்மைச் சோதித்துப் பார்த்தால், இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையில் சகலமும் நன்மையாய் நடந்துகொண்டிருந்த நாட்களில், அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து மனம் திரும்பி, பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கிறோமா, என்று ஆராய்ந்துப் பார்த்தாலும், இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தேசங்களின் தலைவர்களும், அதன் குடிகளும், ஐசுவரியமாய் காணப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிசாய்க்காமல் செவித்தினர்வு உள்ளவர்களாகி, தங்கள் வணக்கா கழுத்தின் நிமித்தம் சுவிஷேசத்திற்கு கீழ்ப்படியாததினால், அவர்களுக்கு ஆபத்துகள் வரும்போது கர்த்தர் அவர்களைப் பார்த்துச் சிரித்து, காணாதவர் போலக் காணப்படுகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளே! நீங்கள் வாழ்ந்திருக்கும் போது கர்த்தரை அண்டிக்கொண்டு, அவருடைய சத்தத்திற்கு முழுவதுமாய் செவிசாய்த்து, கீழ்ப்படிந்து ஜீவியுங்கள். என்றால், உங்கள் ஆபத்து வேளைகளில் நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. கர்த்தர் தீவிரித்து வந்து உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கு முன்பாகவே உங்களுக்குப் பதில் தருவார். எந்த வியாதிகளினால் வரும் ஆபத்தைக்குறித்தும் கலங்காமல் நீங்கள் அமைதியாய் காணப்படலாம், பாதுகாப்பாகக் காணப்படலாம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar