ஏலி! ஏலி! லாமா சபக்தானி?(Eli, Eli, Lama Sabachthani?).

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி,  என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம் (மத். 27:46).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/g06o4b6wCt8

இயேசு சிலுவையில் கூறின நான்காவது வார்த்தையாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. ஒன்பதாம் மணி நேரத்தில் ஆண்டவர் இந்த வார்த்தையைக் கூறினார். யூதர்களுடைய ஒரு நாள் என்பது மாலை 6 மணிக்குத் துவங்கும்,  ஆகையால் நம்முடைய நேரப்படி,  ஒன்பதாம் மணி வேளை என்பது மாலை 3 மணியாய் காணப்படுகிறது. இயேசு பிதாவை நோக்கி ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறினார். கைவிடப்படுதல் என்பது மிகுந்து வேதனையான வார்த்தை. பிள்ளைகள் பெற்றோரால் கைவிடப்படும் போது,  வாழ்க்கை துணைகள் ஒருவரையொருவர்க் கைவிடும் போது,  வயோதிபர்களைப் பிள்ளைகள் கைவிடும் போது,  கடினமான சூழ்நிலைகளில் உடன்பிறப்புகள் கைவிடும் போது,  அது மிகுந்த வேதனையைக் கொடுக்கும்.

பிதாவாகிய தேவனும்,  குமாரனாகிய இயேசுவும் எப்பொழுதும் இணைந்திருந்தனர். என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார்,  பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை(யோவான் 8:29),  பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் (யோவான் 17:2) என்றும் ஆண்டவர் கூறினார். ஆனால்,  சிலுவையில் அதிக வேதனையோடு ஆண்டவர் தொங்கிக்கொண்டிருநத வேளையில் அந்த வேதனையைக் கூட அவரால் சகிக்க முடிந்தது. பேதுரு மறுதலித்ததைக் கூட சகிக்கமுடிந்தது. யூதாஸ் காட்டிக்கொடுத்ததைக் கூட ஏற்றுக்கொணடார். ஆனால் பிதாவாகிய தேவனுடைய முகம் அவருக்கு மறைக்கப்பட்டதை அவரால் சகிக்க முடியவில்லை. ஆகையால்தான் சிலுவையின் பாட்டாகிய சங்கீதம் 22:1ல் எழுதப்பட்ட,  என் தேவனே,  என் தேவனே,  ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும்,  நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என்ற தீர்க்கதரிசன வார்த்தையை மிகுந்த சத்தத்தோடும் வேதனையோடும் அவர் கூறினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே! பிதாவாகிய தேவனுடைய முகம் இயேசுவுக்கு மறைக்கப்பட்டதின் காரணமென்ன? மனுகுலத்தின் பாவமாய் காணப்படுகிறது. இதுவரை பிறந்தவர்கள்,  இனி பிறக்கப்போகிற அத்தனை பேருடைய பாவங்களையும் சுமந்தவராய்,  உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாய் இயேசு சிலுவையில் தொங்கினார். பிதாவாகிய தேவன் பாவிகளை நேசித்தாலும்,  பாவத்தை வெறுக்கிறவர். தீமையைப் பார்க்காத சுத்த கண்களை உடையவர். ஆகையால்,  மகா பரிசுத்தமுள்ள தேவன்,  பாவப் பலியாக தன் குமாரன் சிலுவையையில் தொங்கின வேளையில்,  தம்முடைய முகத்தை இயேசுவுக்கு மறைத்தார். மனிதர்களாய் பிதாவின் முகத்தை இயேசுவுக்கு மறைக்கமுடியவில்லை,  பிசாசினாலும் அவனுடைய தூதர்களான பொல்லாத ஆவிகளாலும் பிதாவின் முகத்தை இயேசுவுக்கு மறைக்கமுடியவில்லை. ஆனால் பாவம் மறைத்தது. ஆகையால் தான் பாவம் கொடிய விஷத்தைக் காட்டிலும் கொடியது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் கொண்ட நோக்கத்தை,  திட்டத்தை இழக்கச் செய்கிற யாவும் பாவம். பாவம் செய்யும் போது தேவ மகிமையை இழந்து விடுகிறோம். ஆகையால் தான் பாவத்தோடு வாழ்க்கையை ஓட்டாதிருங்கள். பாவத்தின் சம்பளம் மரணம்,  பாவம் உங்கள் வாசல் படியில் படுத்துக் கொள்ளும்.

கல்வாரிச் சிலுவையில் ஆண்டவர் அவருடைய ரத்தத்தை நமக்காக  ஊற்றிக்கொடுத்ததினால்,  ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்வது ரத்தமாய்  காணப்படுவதினால்,  சிலுவையண்டை வரும் போது அவர் தம்முடைய ரத்தத்தால் நம்மைக் கழுவி பரிசுத்தமாக்குவார். பாவத்தை மறைக்கிறவனுக்குத் தான் வாழ்வு இல்லை. ஆனால் அறிக்கைச் செய்து விட்டுவிடுகிறவனுக்கு இரக்கம் உண்டு. ஆகையால் இன்றே பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளுவோம். அதுபோலப் பாவத்தில் காணப்படுகிற கோடிக் கணக்கான ஜனங்கள், அக்கினி கடல் நோக்கி ஒடிக்கொண்டிருக்கிற சிலரையாகிலும் அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு,  பயத்தோடே இரட்சிக்கிறவர்களுடைய கூட்டத்தை சேர்ந்தவர்களாய் காணப்பட நாம் நம்மை அற்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org