மத் 28:8,9 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PWfg763uH0g
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை இயேசு தரிசனமானார். மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி, இயேசு கல்லறையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த பெண்களுக்கு இரண்டாவதாக தரிசனமானார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதன் முதலில் இயேசுவை தொழுதுகொண்டதும் பெண் தான்; இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சியாக அறிவிக்க சென்றதும் பெண்கள் தான். இது எதுவுமே தற்செயலாய் நடந்ததல்ல; தேவனின் அநாதி தீர்மானத்தின்படி நடந்தது. பெண்ணடிமை நடைபெற்ற நாட்களில், இயேசு பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.
மிரியாம் ஒரு தீர்க்கதரிசன பாடகி; அவள் தீர்க்கதரிசனமாக சொன்னாள், கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார் (யாத் 15:21) என்பதாக. இயேசுவும் சிலுவையில் மகிமையாய் வெற்றி சிறந்தார். தெபொராள் தீர்க்கதரிசனமாக பாடுவாள், கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள் (நியா 5:31). நம்முடைய ஆண்டவர் நீதியின் சூரியன் என்று அழைக்கப்பட்டார்; அவரில் அன்பு கூறுகிற நாமும் வல்லமையாய் உதிக்கின்ற சூரியனை போல இருப்போம். அன்னாள் தீர்க்கதரிசனமாக பாடினாள், கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள் (1 சாமு 2:10). இயேசு உயிரோடு எழுந்த பிறகு, அவருடைய கொம்பு உயர்ந்தது. இப்படி அநேக பெண்கள் இயேசுவை குறித்து தீர்க்கதரிசன பாடல்களை பாடியதை வேதம் நமக்கு காட்டுகிறது.
இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவிக்க சென்ற ஸ்திரீகளை பார்த்து இயேசு சொன்னது வாழ்க என்று கூறினார். இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவிக்கின்ற ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்றே இயேசு வாஞ்சையுள்ளவராக காணப்படுகிறார். நமக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்ற சேனைகளாக எழும்புகிற உங்களை பார்த்தும், இயேசு சொல்லுவது வாழ்க என்பதாய் காணப்படுகிறது. அவருடைய சுவிசேஷத்தை எடுத்து செல்லுங்கள். நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org