யார் பாக்கியவான்? (Who is blessed?).

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார் (சங்கீதம் 41:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NQtG_B0n-EI

பாக்கியமான,     ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவியம் செய்ய வேண்டும் என்பது நம்முடைய விருப்பமாய் காணப்படுகிறது. ஆனால் யார் பாக்கியவான் என்பதைப் பற்றி இயேசுவின் மலைப் பிரசங்கத்திலும்,     தாவீதின் சங்கீதங்களிலும் எழுதப்பட்டுள்ளது. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவனாய் காணப்படுகிறவன் பாக்கியவான் என்று இந்த வசனம் கூறுகிறது. விதவைகள்,     அனாதைகள்,     கைவிடப்பட்ட முதியவர்கள்,     ஏழைகள்,     வியாதிப்பட்டவர்கள்  என்று சிறுமைப் பட்ட ஜனங்கள் நம்மைச் சுற்றிலும் அனேகர் காணப்படுகிறார்கள். அவர்கள் மேல் சிந்தை வைக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தர் கூறுகிறார். தேசத்தில் எளியவர்கள் இல்லாமல் இருப்பதில்லை என்று வேதம் கூறுகிறது,     ஏனெனில் இருப்பவர்கள் அவர்களுக்கு உதவி செய்யும்படிக்குக் கர்த்தர் அப்படிப்பட்டவர்களை வைத்திருக்கிறார். 

சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தை வைக்கும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன? முதலாவதாக,     தீங்கு நாளில் கர்த்தர் அப்படிப்பட்டவர்களை விடுவிப்பார். எதிர்பாராத ஆபத்துகளிலிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் கர்த்தர் அவர்களை தப்பிக்கப் பண்ணுவார். பிசாசு தீங்கு செய்கிறவன், அவனுடைய கண்ணிகளிலிருந்தும்,     அக்கினி அஸ்திரங்களிலிருந்தும் தப்புவிப்பார். சில வேளைகளில் நாம் அறியாத ஆபத்துகளிலிருந்து கர்த்தர் நம்மை தப்பிக்கப் பண்ணினதைப் பின்னாட்களில் நினைத்து நாம் கர்த்தரைத் துதிக்கிற வேளைகள் அனேகம்  உண்டு.  இரண்டாவதாக அப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் பாதுகாத்து உயிரோடு வைப்பார். கர்த்தர் அருளுகிற ஆசீர்வாதங்களில் மேன்மையான ஒன்று பாதுகாப்பு. ஒவ்வொரு நாளும் காலையில் வீடுகளிலிருந்து புறப்படும் போது,     திரும்பி மீண்டும் வீட்டிற்கு வருவதே பெரிய ஆசீர்வாதமாய் காணப்படுகிறது. போன வருஷத்தைக் கண்டவர்கள் அனேகர் இந்நாட்களில் இல்லை. ஆகையால் தான் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர பயணத்தில் பாளயத்திலிருந்து புறப்படும் போது,     எழுந்தருளும் கர்த்தாவே,     எங்கள் சத்துருக்களைச் சிதறடிக்கப்பண்ணும் என்ற ஜெபத்தோடு புறப்படுவார்கள். மீண்டும் பாளயத்தில் இரவு தங்கும் போது,     கர்த்தாவே ஆயிர மாயிரமான உம்முடைய ஜனங்களிடத்தில் திரும்பிவாரும்,     எங்களோடு தங்கியிரும் என்று வேண்டுகிறவர்களாய் காணப்படுவார்கள். சிறுமைப் பட்டவர்கள் மேல் உங்கள் சிந்தையை வைக்கும் போது,     கர்த்தர் உங்களுடைய போக்கிலும் வரத்திலும் உடனிருந்து உங்களைப் பாதுகாத்து நடத்துவார்.  

மூன்றாவதாக,     சத்துருக்களின் இஷ்டத்திற்கு உங்களை ஒப்புக் கொடுக்கமாட்டார். எதிரிகள் திரளாய் பெருகிக் காணப்படுகிற நாட்களில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். காரணமில்லாமல் பகைக்கிறவர்களும் உண்டு. உங்களுக்கு விரோதமாய் எத்தனை விரோதிகள் எழும்பினாலும் உங்களை அவர்கள் விருப்பத்திற்குக் கர்த்தர் ஒருபோதும் ஒப்புக் கொடுப்பதில்லை. நீங்கள் சிறுமைப் பட்டவர்கள் மேல் உங்கள் சிந்தைகளை வைக்கும் போது,     உங்களுக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதத்தையும் வாய்க்காமல் போகும் படிக்குக் கர்த்தர் செய்வார். நான்காவதாக,     கர்த்தர் உங்கள் வியாதியின் படுக்கையை மாற்றிப் போடுவார். கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் சிறுமைப் பட்டவர்கள் மேல் சிந்தை வைக்கும் போது உங்கள் பலவீனங்களிலிருந்து கர்த்தர் உங்களுக்கு விடுதலையைத் தருவார். அவருடைய சிறகின் கீழிருக்கிற ஆரோக்கியத்தினால் உங்களை மூடுவார்,     நீங்கள் கொழுத்த கன்றுகளாய் வருவீர்கள். ஆகையால் ஏழைகளை அற்பமாய் எண்ணாதிருங்கள்,     அவர்களுக்கு உதவியாய்,     ஆதரவாய் காணப்படுங்கள். அப்போது நீங்கள் பாக்கியவான்களாய் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
http://www.wogim.org
https://youtube.com/uthamiyae