ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமப்பதுபோல(As a father carries his son).

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல,    நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும்,    நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும்,    உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே  (உபா. 1:31).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HDPvuQM_5W4

ஒரு வருடத்தின் கடைசி மாதத்தின் கடைசி நாளைக் காணும் படிக்குக்  கர்த்தர்  நமக்கு  உதவிசெய்தார்.  மெய்யாகவே,     ஒரு தகப்பன்  தன்  பிள்ளையைத்  தன் தோள்மீது சுமந்து கொண்டு செல்வதைப் போல,    வருடத்தின் துவக்கம் முதல் கர்த்தர் நம்மை இம்மட்டும் சுமந்து கொண்டு வந்தார்.

மோசே,    சுமார் இருபது லட்சத்திற்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு வந்தார். வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் ஜனங்கள்,    அவனுக்கு அதிக நெருக்கங்களைப் பல விதங்களில்   கொடுத்தார்கள்.  ஆகையால்,    நீர்  இந்த  ஜனங்கள்  எல்லாருடைய  பாரத்தையும்  என்மேல்  சுமத்தினதினால்,     உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன,     உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?   இவர்களுடைய  பிதாக்களுக்கு  நான்  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்துக்கு  நீ  இவர்களை  முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டு போவதுபோல,     உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர்  என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ? என்று தேவனை நோக்கி முறுமுறுத்து,    கேள்விகளைக் கேட்டான்.  இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த்  தாங்கக்கூடாது,    எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது (எண். 11:14)  என்று  சொன்னான். 

வனாந்தர பயணத்தின் நாற்பது வருட முடிவில்,  கர்த்தர்  எப்படி  இவ்வளவு நாட்களும் தங்களை நடத்திக் கொண்டு  வந்தார் என்று  திரும்பிப் பார்த்த வேளையில்,    தேவனை ஒரு அன்புள்ள தகப்பனாக மோசே  கண்டான். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல,    நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும்,      தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சுமந்துகொண்டு வந்தார் என்று நன்றியோடு நினைவு கூர்ந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே,    ஒரு மனிதனும் நம்முடைய பாரங்களைச் சுமக்கமுடியாது,    நம்மைப் பாதுகாக்கமுடியாது,    நம்முடைய தேவைகள்  முழுவதையும் சந்திக்க முடியாது,    எல்லா வேளைகளில் நம்முடன்  காணப்படவும் முடியாது. உலகத் தகப்பன்மார்கள் ஓரளவு நமக்கு உதவிசெய்ய முடியும்,    துணைநிற்கக் கூடும். ஆனால் நம்முடைய பரம தகப்பன் நம்மை எப்பொழுதும் சுமக்கிறவர்,    தாங்குகிறவர்,    விடுவிக்கிறவர்,    அவர்  ஒருவரே நல்ல தகப்பன்.

வருடத்தின் கடைசி வரை    நம்மை சுமந்து கொண்டு வந்த பரம தகப்பனுக்கு  நன்றி செலுத்துவோம். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தருடைய வார்த்தைக் கூறுகிறது.    யுத்தங்களிலிருந்தும்,     இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும்,    நம்மைப் பாதுகாத்து,     தம்புவித்த தேவனுக்கு நன்றி பலிகளை ஏறெடுங்கள். தேவனுக்கு நன்றிப் பலிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் ஏறெடுக்காவிடில் நம்முடைய இருதயங்கள் இருளடைந்து விடும் என்று வேதம் எச்சரிக்கிறது (ரோமர் 1:21).  கர்த்தர் எனக்குச் செய்த  எல்லா உபகாரங்களுக்காகவும்,     அவருக்கு  என்னத்தைச் செலுத்துவேன்,    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,    கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் என்ற சங்கீதக்காரனைப் போல,    நம்மையும்,     நம்முடையதையும் கர்த்தருக்குக் கொடுத்து அவரை நன்றியோடு தொழுது கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar