இயேசுவின் உள்ளார்ந்த காயங்கள்(Inner wounds of Jesus):-

1 பேது 3:18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hl9I5OSEfTs

இயேசு சிலுவை பாதையில் செல்லும்போது அநேக பாடுகளை சந்தித்தார். வெளியரங்கமாக அவருடைய சரீரம் அநேக பாடுகளும் காயங்களும் அடைந்தது. அதுபோல தான் இயேசுவின் உள்ளார்ந்த காயங்கள் வெளியரங்கமாக காணப்பட்ட காயங்களை பார்க்கிலும் அதிகம்.

தேவாலயத்தில் தன்னை தேவகுமாரனாக காண்பித்தபோது, அங்கிருந்தவர்கள் இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்று சொல்லி அவரை தாழ்த்தி பேசியபோது அவர் மனது புண்பட்டிருக்கக்கூடும். இவர் தச்சனுடைய மகனல்லவா என்று அவருடைய தொழிலை அற்பமாக எண்ணி பேசியபோது இயேசுவின் உள்ளம் காயப்பட்டிருக்கும். ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன பேதுரு பின்பு இயேசுவை மறுதலித்த போதும் அவரை சபித்த போதும் இயேசுவின் உள்ளம் உடைந்திருக்கும். கூடவே இருந்த யூதாஸ் காரியோத்து முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவை முத்தத்தினால் காட்டிக்கொடுத்தபோது, அவருடைய உள்ளம் மகா வேதனை அடைந்திருக்கும். இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுக்கும்போது தன்னோடு மூன்றரை வருடங்கள் இருந்த சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனபோது, தாங்கமுடியாத துயரத்தை இயேசு சந்தித்திருக்கக்கூடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிலுவைபாதையில் பிதாவுடைய ஐக்கியம் முறிக்கப்படப்போகிறது என்பதை நினைத்து அவருடைய இருதயம் உடைக்கப்பட்டதாய், தாங்கிக்கொள்ள முடியாத வேதனையால் நிறைந்தது. நாம் சில வேளையில் நினைக்கக்கூடும் இயேசு ஏன் பிதாவின் ஐக்கியம் முறிக்கப்படப்போவதை நினைத்து துக்கப்படவேண்டும். அவருக்கு தான் தெரியுமே தான் மூன்றாவது நாள் மீண்டும் உயிரோடெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க போகிறார் என்று சிலர் எண்ணுவதுண்டு. காரணம் நமக்கு பிதாவின் ஐக்கியம், இயேசுவின் பிரசன்னத்தை இழந்து மீண்டும் ஆராதனையில் வந்து புதுப்பித்துக்கொள்வதெல்லாம் சகஜமாகிவிட்டது. அதைக்குறித்து பெரியதாக நினைப்பதில்லை. ஆனால் இயேசுவோ ஆதியிலிருந்து பிதாவினிடம் பூரண ஐக்கியத்தை வைத்திருந்தார். சிலுவையில் சரீரங்களில் ஏற்பட்ட காயத்தினால் வந்த வலியை காட்டிலும், பிதாவிடம் இருந்த அந்த ஐக்கியம் முறிக்கப்படப்போகிற வலி தான் இயேசுவுக்கு அதிகமாக தாங்கிக்கொள்ளமுடியாமல் இருந்தது. அப்படியாக அவருடைய உள்ளார்ந்த இருதயம் அதிக காயங்கள் அடைந்தது. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெ 4:15) என்று வசனம் சொல்லுகிறது. இயேசு எல்லா வேதனைகளையும் பாடுகளையும் கஷ்டங்களையும் உங்களுக்காக சகித்தார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org