சோதனைகளுக்கு தப்பிப்போகும் வழி(The way of escape from temptation).

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்,    உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்,    சோதனையைத் தாங்கத்தக்கதாக,    சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரி. 10:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tg2E4q003rs

சோதனை என்பது மனிதர்களுக்கு பொதுவாக நேரிடுவது தான். சோதிக்கப்படுதல் பாவமல்ல,    சோதனையில் விழுவது பாவமாகும். யோபு சோதிக்கப்பட்டான்,    ஆனால் பாவத்தில் விழவில்லை. சத்துரு,    தவறான காரியத்தைச் செய்வதற்கு நம்மைத் தூண்டிவிடுகிறவன்,    அவனைச் சோதனைக் காரன் என்று வேதம் அழைக்கிறது. ஆதாம்,    ஏவாள்,    சிம்சோன்,    தாவீதிலிருந்து இன்று வரைக்கும் அவன் தேவ பிள்ளைகளைச் சோதிக்கிறான். இஸ்ரவேல் சபை வனாந்தரத்தில் காணப்பட்ட நாட்களில் அவர்களைச் சோதித்தான். அவர்கள் எல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள்,    சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்,     மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்.  எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்,    எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில்,    அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அனேக ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றிருந்தும்,    அவர்களில் அதிகமானார்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை,    அதற்குக் காரணம் அவர்கள் பத்து முறை தேவனை பரிச்சை பார்த்தார்கள்,    சத்துருவின் தூண்டுதலுக்கு இடம் கொடுத்தார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர்களுக்கு,    தேவன் கொடுத்த தேவதூதர்களின் அப்பமாகிய மன்னாவை விட எகிப்தின் வெள்ளரிக்காய்களும்,    கோமட்டி காய்களும்,    கீரை,    வெங்காயம்,    வெள்ளைப் பூண்டு,    இறைச்சி  போன்றவற்றை அதிகமாய் விரும்பினார்கள். மோவாபிய ஸ்திரீகளோடு விபச்சாரம் செய்தார்கள்,    வனாந்தர வழியினிமித்தம் மனமடிவாகி தேவனுக்கு விரோதமாகவும்,    மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்தார்கள்,    இப்படிப்பட்ட அனேகக் காரியங்களைச் செய்து சோதனைக்காரனிடம் தோற்றுப் போனார்கள். ஆகையால் அவர்களில் இரண்டு பேரைத் தவிர எகிப்திலிருந்து புறப்பட்ட இருபது வயதிற்கு மேற்பட்ட யாரும் கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. 

இந்நாட்களிலும் தேவ ஜனங்களை இப்படிப்பட்ட காரியங்களினாலும்,    வியாதிகள்,    கஷ்டங்கள்,    தரித்திரங்கள்,    இச்சைகள்,    இழப்புகளை; கொடுத்தும் சோதிக்கிறான். ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருநாளும் உங்கள் திராணிக்கு மேலாகச் சோதிக்க அனுமதிக்க மாட்டார். இயேசு நாற்பதுநாள் பிசாசினால் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்,    எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,    பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய இயேசு நமக்கிருக்கிறார். அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே,    அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். ஆகையால் உங்கள் சோதனைகளைத் தாங்கத்தக்கதாகவும்,    அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உங்களுக்குத் தருவார்;. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்,    அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு,    இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். ஆகையால் ஒரு நாளும் சோர்ந்து போய் முடங்கிவிடாதிருங்கள். உங்கள் விடுதலையின் நாள் துரிதமாய் வருகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae