உம்முடைய சமூகம் (Your Presence).

அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால்,    எங்களை இவ்விடத்திலிருந்து  கொண்டு போகாதிரும் (யாத். 33:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vR9Ho8bBlEk

இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு வந்த மோசேயை,    கர்த்தர் சீனாய் மலையின் மேல் அவருடைய சமூகத்தில் ஏறிவரும் படிக்குக் கூறினார். மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து,    மலையின்மேல் ஏறி,    இரவும் பகலும் நாற்பதுநாள்  மலையிலிருந்தான்.  அங்குக் கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரியையும்,    அதில் ஊழியம் செய்யும் முறைமைகளையும்,    பிரமாணங்களையும் அவனுக்குக் கொடுத்தார். மோசே கீழே இறங்கி வர காலதாமதமானதால்,    மலையின் அடிவாரத்தில் காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள்,    ஆரோனிடத்தில் வந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்று சொன்னார்கள். மோசே மலையுச்சியில்  தேவப்பிரசன்னத்தில்,    ஜனங்களின்  நன்மைக்காகத் தேவனோடு பேசிக்கொண்டிருக்கிறான்,    கீழே அதே ஜனங்கள் வேறு தெய்வங்களைப் பின்பற்றவும்,    அவைகளுக்குப்  பலிபீடங்களைக் கட்டி பலிசெலுத்தவும்,    பண்டிகைக் கொண்டாடவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.  இந்நாட்களிலும் இப்படிப்பட்ட ஜனங்கள் சபைகளில் காணப்படுகிறார்கள்.  மேய்ப்பர்கள்  ஜனங்களுக்காகத் திறப்பிலே நிற்பார்கள்,    பரிந்து பேசுவார்கள்.  ஆனால் அதினிமித்தம்  கர்த்தரிடத்திலிருந்து  நன்மைகளைப் பெற்ற ஜனங்கள்,    சபைகளில் பிரிவினைகளையும்,    திறப்புகளையும் உண்டாக்குகிறவர்களாகவும்,    முறுமுறுக்கிறவர்களாகவும் காணப்படுவார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ,    எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.  அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்,    அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து,    அதைப் பணிந்துகொண்டு,    அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே,    உங்களை எகிப்துதேசத்திலிருந்து  அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே  என்று சொன்னார்கள் என்றார். மேய்ப்பன் அவர்களோடு இல்லாத நாற்பது நாட்களுக்குள் ஜனங்கள்  பாகாலை  ஆராதிக்க ஆயத்தமானார்கள். இந்நாட்களிலும்,    மந்தையை விட்டு விட்டு வெளிநாடுகளில் சுற்றித்திரிகிற மேய்ப்பர்களையும்,     தங்களை நடத்த மேய்ப்பர்கள் எவ்வளவு அவசியம் என்பதை அறியாத மந்தையின் ஜனங்களையும் எங்கும் பார்க்கிறோம்.  கர்த்தர் மோசேயை நோக்கி,    நீயும்,    எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு,    உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.  நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்,    நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன் என்று கூறினார். 

கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்ட மோசேயின் இருதயம் வேதனை கொண்டது,    அவன் ஆண்டவரை நோக்கி,    உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால்,    எங்களை இவ்விடத்திலிருந்து  கொண்டுபோகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்,    நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின் மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும்,    நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். தேவனுடைய சமூகம் இல்லாத பாலும் தேனும் ஓடுகிற கானானைப் பார்க்கிலும்,    தேவப் பிரசன்னத்தோடு காணப்படுகிற  வனாந்தரமே மேல் என்பதை மோசே அறிந்திருந்தான்,    ஆகையால் தான் உம்முடைய சமூகம் எங்களோடு வரவில்லை என்றால் இவ்விடத்திலிருந்து அழைத்துக் கொண்டு செல்லாதிரும் என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.  அதற்குக் கர்த்தர்,    என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்,    நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்குக் கொடுத்தார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஒரு வருடத்தின் துவக்க நாட்களில் காணப்படுகிறோம். இந்த வருடம் முழுவதும் கர்த்தருடைய பிரசன்னத்தை அதிகமாய் வாஞ்சியுங்கள். அவருடைய சமூகம் இல்லாத எந்த இடத்திற்கும் செல்லாதிருங்கள். கர்த்தருடைய பிரசன்னம் உங்களுடைய உச்சி முதல் பாதம் வரை நிரப்பும் படிக்குத் தாகத்தோடு கேளுங்கள். மரியாளைப் போல அவருடைய பாதத்தில்,    ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமருவதை விரும்புங்கள். சூலமித்தி கூறினாள்,    என் நேசர் கிச்சிலி மரம் போன்றவர்,    அவருடைய நிழலின் கீழ் வாஞ்சையாய் அமருகிறேன் என்பதாக. நீங்களும் ஆண்டவருடைய பிரசன்னத்தின் நிழலின் கீழ் காணப்படுவதை அதிகமாய் விரும்புங்கள். அப்போது கர்த்தர் அவருடைய தயையை எல்லாம் உங்களுக்கு முன்பாகக் கடந்து போகும் படிக்குச் செய்வார். உங்கள் மேல் கிருபையாயும்,    இரக்கமாயும் இருப்பார். பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் நீங்கள் விஷேசித்தவர்களாய் காணப்படுவீர்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae