பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்(Run to win the prize).

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள் ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள்  பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் (1 கொரி. 9:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Vkbris-kFcM

கொரிந்து பட்டணத்து ஜனங்கள் விளையாட்டுகளை அதிகமாய் விரும்புகிறவர்கள். ஆகையால் அவர்களுக்கு அப்போஸ்தலனாகிய  பவுல் நிருபத்தை எழுதும் பொழுது ஆவிக்குரிய ஜீவியத்தை ஒட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒரு வீரனுக்கு ஒப்பிட்டு எழுதுகிறார்.  பந்தயச் சாலையில் அனேகர் ஓடினாலும் வெற்றி பெறுகிற ஒருவனே பந்தயத்திற்குரிய  பதக்கத்தைப் பெறுவான். அதுபோல ஆவிக்குரிய ஓட்டத்தில் ஓடுகிற அத்தனை பேரும் பரலோகம் என்னும் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்க தாக ஓடுங்கள் என்று ஆலோசனை கூறுகிறார்.  அதற்குத்  தன்னை  மாதிரியாகக் காண்பித்து, நான் நிச்சயமில்லாதவனாக ஓடுவதில்லை என்றும் ஆகாயத்தை  அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணுவதில்லை என்றும் சாட்சியாகக் கூறுகிறான். 

கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டம் நியமிக்கப்பட்டிருக்கிறது. நமக்காக நாம் தான் ஓடவேண்டுமே தவிர வேறொருவர் நமக்காக ஓடமுடியாது. நாம் செம்மையாக ஓடுவதற்குரிய உதவிகளையும், ஆலோசனைகளையும் அனேகர் கொடுத்தாலும் நம்முடைய விசுவாச ஓட்டத்தை நாம் தான் ஓடவேண்டும். நமக்கு முன்பாக மேகம் போன்ற திரளான முற்பிதாக்கள் ஏற்கனவே செம்மையாக ஓடி, ஜெயங்கொண்டு  நித்தியத்தைச்  சுதந்தரித்திருக்கிறார்கள். ஆகையால் நாமும் எல்லாவற்றிலும் இச்சையடக்கம் உள்ளவர்களாயிருந்து பொறுமையோடு  ஓடவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். யோவான் தன்னுடைய பணிவிடை  ஓட்டத்தைச் செம்மையாக நிறைவேற்றினார். அப்போஸ்தலனாகிய  பவுல் ஒட்டத்தை முடித்தேன் என்று தன்னுடைய வாழ்வின் கடைசி நாட்களில் திமத்தேயுவுக்கு எழுதினார். 

பிசாசு நம்முடைய ஒட்டத்தைத் தடைசெய்வதற்குப் பல விதங்களில்  முயற்சிசெய்வான். நியமிக்கப்பட்ட தடத்திலிருந்து விலகி மனம் போல ஓடச்செய்வான். வேதம் காட்டுகிற பூர்வ பாதைகளிலிருந்து விலகி புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து ஓடும்படிக்குச் செய்வான். சில வேளைகளில் பின்னிட்டுப் பார்க்கும் படிக்குச் செய்வான், ஆகையால்  லோத்தின்  மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாம் வீணாக ஓடவில்லை என்ற மகிழ்ச்சி  கிறிஸ்துவின் நாளில் நமக்கு உண்டாகவேண்டும், ஆகையால் நீங்கள் இடது புறம் வலது புறம் சாயாதபடிக்கு, வழியிதுவே என்று கூறுகிற ஆவியானவருடைய சத்தத்தைக் கேட்டு நீதியின் பாதையில் ஓடுங்கள், அப்பொழுது ஜீவக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar