ஒருவரையொருவர் கூர்மைப்படுத்துதல் (Sharpening one another).

இரும்பை இரும்பு கருக்கிடும்,     அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான் (நீதி. 27:17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wBDwahhbChc

சாலொமோன் மூவாயிரம் நீதிமொழிகளையும்,     ஆயிரத்து ஐந்து பாடல்களையும் எழுதினான். அவைகள் எல்லாம் தனிப்பட்ட ஜீவியத்திற்கும்,     குடும்ப வாழ்க்கைக்கும்,     சமுதாயத்திற்கும்,     ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் மிகவும் பிரயோஜனமுள்ளது.  இரும்பை இரும்பு கருக்கிடும் என்பது,     ஒருவருக்கொருவர் உதவி செய்து,     மற்றொருவரிலிருக்கிற சிறந்ததை  வெளிப்படுத்துவதற்குத்  துணைநிற்பதாகும். இரும்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க,     அதை ஒருவன் தீட்டாமல்போனால்,     அதிகபலத்தை பிரயோகம் பண்ணவேண்டியதாகும் என்று பிரசங்கி 10:10 கூறுகிறது. கூர்மையாக்கப்படாத ஆயுதங்களின்  உற்பத்தி திறன் குறைவாய் காணப்படும். வேதவார்த்தைகளும் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திற்கு ஒப்பாய் காணப்படுகிறது. நாம் சபை கூடிவரும் போதும்,     ஐக்கியம் கொள்ளும் போதும் கர்த்தருடைய வார்த்தை நம் ஒவ்வொருவரையும் கூர்மைப் படுத்தி,     நம்மில் காணப்படுகிற துரு போன்ற சுபாவங்களை அகற்றி,     கிறிஸ்துவின் சாயலை அணியும் படிக்குச் செய்கிறது. 

மனிதன்  தனிமையாயிருப்பதற்காக உருவாக்கப்படவில்லை. அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்பதைக் கண்ட கர்த்தர்,     ஆதாமுக்கு ஏற்ற துணையாய் ஏவாளைச் சிருஷ்டித்தார். ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்,     அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்,     ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்,     ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ,     அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே என்று வேதம் கூறுகிறது. சிலவேளைகளில் இளம் தம்பதிகளுக்குள்ளாய் பலவிதமான பிரச்சினைகள் தோன்றுகிறது. ஏன் இந்த நபரைத் திருமணம் செய்தேன் என்று சொல்லுகிறவர்களும் உண்டு. ஒருவர் ஏற்கனவே கூர்மையாக்கப்பட்ட நபராய் காணப்படக் கூடும்,     நன்கு படித்த,     நாகரீகமுள்ள,     நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகிறவராய் காணப்படுவார். மற்றவர் மழுங்கிய ஒரு இரும்பைப்  போலக்  காணப்படலாம்,     கல்வியில் குறைவாகவும்,     பழக்கவழக்கங்களில் குறைவாயும் காணப்படக் கூடும். ஆனால் பொறுமையும்,     கீழ்ப்படிதலும்,     மன்னிப்பும்,     விட்டுக்கொடுக்கிற சுபாவங்களும் காணப்படும் போது,     நாளடைவில் ஒருவருக்கொருவர் காணப்படுகிற உராய்வுகள் எல்லாம் விலகி,     இரண்டு பேரும் இணைந்து,     கூர்மையாக்கப்பட்ட கருவிகளைப் போல,     சாட்சியுள்ள குடும்ப ஜீவியம் செய்யமுடியும். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்களை இன்னும் கூர்மையாக்குகிறவர்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள். விசுவாச ஜீவியத்தில் இன்னும் வளரச் செய்கிறவர்களோடு நட்பு பாராட்டுங்கள். உங்களை இன்னும் கூர்மைப் படுத்துகிற சபை ஐக்கியத்தில் அங்கமாகக் காணப்படுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்தத்திலும்,     கர்த்தர் பேரில் கொண்ட வைராக்கியத்திலும்,     ஜெபஜீவியத்திலும் இன்னும் அதிகமாக வளருவீர்கள். ஒருநாளும் உங்களை மழுங்கச்செய்கிறவர்களோடு ஐக்கியம் கொள்ளாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்,     மூடருக்குத் தோழனோ நாசமடைவான் என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் மழுங்கிப் போனவர்களாய் அல்ல,     கூர்மையாக்கப்பட்ட,     எஜமானுக்கு பிரயோஜனமான பாத்திரங்களாய் காணப்படுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae