கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதி பாக்கியமுள்ளது(Blessed is the nation whose God is the Lord):-

சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MGjHLOVeZ8I

பாக்கியவான் என்ற வார்த்தை வேதத்தில் அநேக இடங்களில் வருவதை பார்க்கலாம். சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன், உம்மை நம்பியிருக்கிற மனுஷன், சிட்சித்து உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன், கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார், ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுடையவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களெல்லாம்   பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறதை பார்க்கமுடிகிறது. அதுபோல கர்த்தரை தம் தெய்வமாக கொண்ட ஜனங்கள் பாக்கியமுள்ளது. வசனம் சொல்லுகிறது எரேமியா 17:7ல் கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று.

கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தரை தெய்வமாக கொண்டிருந்தாலும், கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் எத்தனையோ கோடி ஜனங்களை குறித்த கரிசனை,  பாரம் நமக்கு இருப்பது மிகவும் அவசியம். அன்றைய இஸ்ரவேல் ஜனங்கள் மோசே வருவதற்க்கு தாமதமான உடன்  தங்களுக்கு விக்கிரகங்களை உண்டாக்கி அதை தெய்வமாக நமஸ்கரிக்க தொடங்கினார்கள். இன்றைக்கும் நம்முடைய தேசங்களில் ஜீவனை கொடுத்து அன்பு கூர்ந்த இயேசுவை அறிந்துகொள்ளாமல், கோடிக்கணக்கான ஜனங்கள் விக்கிரகத்தையும், மனிதர்களையும் வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். வசனம் சொல்லுகிறது அப்போஸ்தலர் 17:29ல்  நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது என்பதாக. அதுமாத்திரமல்ல அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும் என்றும் வேதம் எச்சரிக்கிறது.

சாது சுந்தர் சிங் ஒரு சீக்கிய வழிபாட்டை பின்பின்பற்றுகிற குடும்பத்தில் வளர்ந்தபோது, யேசுகிறிஸ்துவை புறக்கணிக்கிறவராக காணப்பட்டார். இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம், நிம்மதியில்லாத சூழ்நிலை. அநேக பாரம்பரியங்களை சரியாக பின்பற்றிவந்த போதிலும் அவருக்குள்ளாக சமாதான குலைச்சல் அதிகமாக காணப்பட்டது. ஒரு நாள் இரவு யார் உண்மையான தெய்வமோ அவர் வந்து எனக்கு தரிசனமாகி என்னுடைய கூப்பிடதலுக்கு செவிகொடுக்க வேண்டும்; இல்லையென்றால் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தார். இரவெல்லாம் அவர் கூப்பிட்டபோது திடீரென்று ஆணிகள் கடாவப்பட்ட கரத்தோடு இயேசு அவருக்கு தரிசனமாகி சொன்னார் நானே மெய்யான தெய்வம்; நானே வழியும் சத்தியமும் ஜீவனமாயிருக்கிறேன்; நானே உனக்காக மறித்தேன்; நானே உனக்காக உயிரோடு எழுந்திருக்கிறேன் என்று சொன்னபோது, அன்றிலிருந்து அவர் இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு பாக்கியவானாக மாறினார். மாத்திரமல்ல அநேக ஜனங்களுக்கு ஏசுவே மெய்யான தெய்வம் என்று பறைசாற்றினார். அதன் மூலமாக அநேகர் பாக்யவான்களாக மாற்றப்பட்டனர்.

நம்முடைய சொந்தம் பந்தம், உறவினர்கள், நண்பர்களெல்லாம் வேதனைக்குள்ளாக இருப்பதை பார்க்கிற நாம் அவர்களுக்காக திறப்பிலே நிற்கிற ஜனங்களாக இருக்க வேண்டும். மாத்திரமல்ல அவர்களும் பாக்யவான்களாக மாறுவதற்கு கிருஸ்துவை பற்றி பிரசங்கிக்கிறவர்களாக நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21 ).

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org