நிர்ப்பந்தமான மனுஷன் நான்(What a wretched man I am).

ரோமர் 7:24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/I1lByFBydQ8

பவுல் சொல்லுகிறார் எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன் என்பதாக. அநேக வேளைகளில் இப்படித்தான் நம்முடைய விருப்பம் ஒன்று ஆனால் நாம் செய்வது மற்றொன்றாய் காணப்படுகிறது. மாம்சத்துக்குரிய காரியங்களில் சிக்கி தவிக்கிறோம். நிர்ப்பந்தமான மனுஷனை போல காணப்படுகிறோம். யார் தான் இந்த மரண சரீரத்தினின்று விடுதலையாக்கக்கூடும் என்று ஏங்கி தவிக்கிறோம்.

இனி நாம் மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கும்படியாக அழைக்கப்பட்டவர்கள். நம்முடைய மாம்சத்தை சிலுவையில் இயேசுவோடு கூட அறைகிறவர்களா காணப்படவேண்டும். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் என்று வசனம் சொல்லுகிறது. இனி நாம் மாம்ச இச்சைகளை உதறி தள்ளிவிட்டு தேவனுக்கு பிரியமாய் நடக்கும்படியாக அழைக்கப்பட்டவர்கள். கர்த்தருடைய ஆவி உங்களுக்குள்ளாக வாசம் செய்யும்போது நீங்கள் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். மாத்திரமல்ல கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்றும் வசனம் சொல்லுகிறது. தேவனுடைய ஆவியினால் நீங்கள் நடத்தப்படும்போது, நீங்கள் தேவனுடைய புத்திரராய் இருப்பீர்கள் என்றும் வசனம் சொல்லுகிறது. பவுல் நிர்ப்பந்தமான மனுஷனாக இருந்தான்.

ஒருமிகப்பெரிய அப்போஸ்தலன் தன்னை நிர்ப்பந்தமான மனுஷன் என்று சொல்கிறான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். நாம் நம்மையே மிகைப்படுத்துகிறவர்களாக காணப்படலாகாது. நான் என்னுடைய பார்வைக்கு சரியானவன், என் மனத்தின்படி சரியானதை செய்கிறேன் என்று மேட்டிமையாக விவாத குணத்துடன் வாழலாகாது. மாறாக குறைகளை நிறைவாக்குகிற கர்த்தரிடம் உங்கள் குறைகளை சொல்லிவிடுங்கள்.

இப்படி நிர்ப்பந்தமான மனுஷன் என்று சொன்ன பவுல் தான் சொல்லுகிறான் கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்பதாக சொல்லுகிறான். நிர்பந்தத்தில் இருக்கிற நீங்களும் இப்படியாக சொல்லமுடியுமா ? வாழ்க்கையில் என்ன ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் பிரச்சனைகள் வந்தாலும், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின் படி நடந்து தேவனுடைய அன்பு ஒருநாளும், ஒருவேளையும் என்னை பிரிக்கமாட்டாது என்று சொல்லுகிறவர்களாக ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org