சாதாரணமானவனை,    அசாதாரணமாக்கும் அபிஷேகம் (Anointing makes the ordinary into extraordinary).

அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து,    அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான்,  அந்நாள் முதற்கொண்டு,    கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார், சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான் (1 சாமு. 16:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_vSUWjm6rwA

ஆவியான தேவனுடைய அபிஷேகம் சாதாரணமானவர்களைக் கூட அசாதாரணமானவர்களாய் மாற்றும். தாவீது ஆடுகளுக்குப் பின்பாக அலைந்து திரிந்தான். அவன் தகப்பனும்,    சகோதரர்களும் கூட அவனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி  ஈசாயின்  குடும்பத்தாரை பலிவிருந்திற்கு அழைத்த வேளையில்,   தாவீதை தவிர்த்து,    மற்றவர்கள் எல்லாரும் விருந்திற்கு வந்தார்கள். இப்படி ஒதுக்கப்பட்ட ஒருவனைக் கர்த்தருடைய கண்கள் கண்டுபிடித்தது,    தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன் என்று கர்த்தர் கூறினார். இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் போனதினால்,    கர்த்தர் கிருபையாய்  அவனுக்குக் கொடுத்த  ராஜ்யபாரத்தை இழந்தான். அவனுடைய ஸ்தானத்தில் தாவீதை ராஜாவாக வைப்பதற்குக் கர்த்தர் தீர்மானித்தார். ஆகையால் சாமுவேல் தீர்க்கதரிசியை ஈசாயின் குடும்பத்திற்கு அனுப்பி சிவந்த மேனியும்,    அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனுமாயிருந்த தாவீதை தைலக்கொம்பின் அபிஷேக தைலத்தினால் அபிஷேகித்தார். அன்றிலிருந்து ஆவியானவர் அவன் மேல் வந்து இறங்கித் தங்கினார். அவன் மேல் இறங்கின அபிஷேகம் அவனை அசாதாரணமானவனாய் மாற்றியது. அவன் கர்த்தருடைய யுத்தங்களை நடப்பிக்கிறவனாய் மாறினான். கோலியாத்தை வீழ்த்தி இஸ்ரவேல் ஜனங்களுக்கு பெரிய இரட்சிப்பைக் கொண்டு வந்தான். கர்த்தருடைய ஆலயத்தைக் குறித்த பக்தி வைராக்கியமுள்ளவனாய் காணப்பட்டான். யாக்கோபுடைய தேவனால் பெற்ற அபிஷேகம்,    அவனை இஸ்ரவேலின் தேவனுக்குச் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடும் படிக்குச் செய்தது. அவனுடைய காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழிய செய்யும்படிக்குச் செய்தது. அதுபோல  ஆரோனுடைய சிரசின் மேல் அபிஷேகத் தைலம் ஊற்றப்பட்ட வேளையில்,    சாதாரண ஒரு மனிதனாய் காணப்பட்டவனை,    அது இஸ்ரவேலின் முதல் பிரதான ஆசாரியனாய் மாற்றினது.  பெந்தெகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட அபிஷேகம் சாதாரண மீனவர்களை அசாதாரணமானவர்களாகவும்,    உலகத்தை;தை கலக்குகிறவர்களாகவும் மாற்றியது.

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஆவியானவருடைய அபிஷேகத்தை வாஞ்சியுங்கள். நான் சாதாரணமானவன்,    என்னைக் கொண்டு கர்த்தர் எதைச் செய்யமுடியும் என்று நீங்கள் நினைக்கக் கூடும். கர்த்தருடைய அபிஷேகம் உங்களை  மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசப்படுத்தும்,    மேன்மைப்படுத்தும். ஆகையால் ஆவியானவருடைய அபிஷேகத்தின் நிறைவை  வாஞ்சியுங்கள். இயேசுவினால் உரைக்கப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தமாகிய ஆவியானவரின் அபிஷேகத்திற்கு,    சீஷர்கள் எருசலேமிலே காத்திருந்தார்கள். அதுபோல காத்திருந்து ஜெபித்து அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் பெற்றுக் கொண்ட அபிஷேகம் அவர்களைப் பூமியில் கடைசி மட்டும் சாட்சியாய் காணப்படும் படிக்குச் செய்தது. அதுபோல கர்த்தருடைய அபிஷேகம் உங்களைப் பூமிக்கு உப்பாய் உலகத்திற்கு வெளிச்சமாய் காணப்பட்டு சாட்சியாய் வாழும் படிக்குச் செய்யும். அவருடைய அபிஷேகம் சகலவற்றையும் குறித்து உங்களுக்குப் போதிக்கும்,    உங்களுக்குக் கல்விமான்களின் நாவை தரும். ஆகையால் ஆவியானவரோடு ஐக்கியமாயிருங்கள்,    அவருடைய அபிஷேகம் உங்களை அசாதாரணமானவர்களாய் மாற்றும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae