மோசேக்கு கர்த்தர் கொடுத்த மூன்று அடையாளங்கள்(Three signs God gave to Moses):-

அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான் (யாத்திராகமம் 4:1,2) 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QQyrm1Y1g1U

ஆண்டவர் எப்பொழுதும் உங்களுடைய கரங்களில் என்ன இருக்கிறது என்பதை மாத்திரம் பார்க்கிறவர். உங்களிடம் இல்லாததை பார்க்கிறவர் அல்ல. எலிசா விதவையிடம் கேட்டான் வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்று. அவளிடம் இருந்தது ஒரு குடம் எண்ணெய் மாத்திரமே. அதைக்கொண்டு அவளுடைய பிரச்சனைகளை தீர்க்கும்படியாக கர்த்தர் செய்தார் (2 இராஜ 4:2,3).

முதலாவதாக ஆண்டவர், கையிலிருக்கும் கோலை தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று (யாத் 4:3). சாத்தான் நம்மை விட்டு வெகு தொலைவிலிருக்கிறான் என்று எண்ணிவிட கூடாது. அவன் நாம் நினைப்பதைக்காட்டிலும் சில வேளைகளில் நமக்கருகாமையில் இருப்பான். தேவையில்லாத தவறான புரிதலை கொண்டுவருவான், இச்சைகளை, மாம்சத்தின் பெருமைகளை விதைக்கிறவனாக காணப்படுவான். கோல் சர்ப்பமாக மாறியவுடன் மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆகையால் சாத்தானை பார்த்து நாம் பயப்படுகிறவர்களாக இருக்கலாகாது. அவன் நமக்கு அருகாமையில் வந்தால் அவனுக்கு எதிர்த்து நிற்கவேண்டும். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். காரணம் இயேசு ஏற்கெனவே அவனுடைய சகல தந்திரங்களையும் சிலுவையில் உரித்துப்போட்டார். தேவபிள்ளைகளுக்கு முதலாவதாக இப்படிப்பட்ட தெய்வீக அதிகாரம், பிசாசை எதிர்க்கத்தக்க அதிகாரத்தை கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை (ரோம 7:18) என்று வசனம் சொல்லுகிறது. நமக்குள்ளாக சுயம், பெருமை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை போன்ற குஷ்டங்கள் காணப்படுகிறது. அவற்றை நாம் சுத்திகரிக்கும்படியாக நம்மை நாமே கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும். நாம் எல்லாவற்றிலும் ஒழுங்கு, பரிசுத்தமானவர்கள் என்று எண்ணிக்கொள்ள கூடாது. ஒவ்வொருநாளும் ஆவியானவர் நமக்குள்ளாக இருக்கிற குஷ்டம் என்னும் காரியங்களை சுட்டிக்காட்டும்போது நம்மை சரிபடுத்திக்கொள்ள வேண்டும். ஒரு தேவ பிள்ளை நான் எல்லாவற்றிலும் உத்தமன் என்று தன்னை தானே எண்ணிக்கொள்வானேயென்றால், அவன் கர்த்தருடைய வேலைக்கு தகுதியற்றவன் என்றே பொருள்.

மூன்றாவதாக, அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். பூமிக்கடுத்தவைகளை, உலகத்துக்குரிய காரியங்களை தண்ணீரை போல நாம் வெளியே ஊத்துகிறவர்களாக காணப்படவேண்டும். கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா 2:20) என்று பவுல் சொல்வதைப்போல நாமும் ஜீவிக்க வேண்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org